வட்ட வடிவ பேட்டரியை விழுங்கியதால் மூச்சுதிணறி உயிருக்கு போராடிய குழந்தை
பொம்மைகளில் பொருத்தப்படும் வட்ட வடிவ பேட்டரியை விழுங்கியதால் 2 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிருக்கு போராடியது. சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்கள் நவீன சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்றினார்கள்.
சிவகங்கை
பொம்மைகளில் பொருத்தப்படும் வட்ட வடிவ பேட்டரியை விழுங்கியதால் 2 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிருக்கு போராடியது. சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்கள் நவீன சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்றினார்கள்.
குழந்தைக்கு மூச்சுதிணறல்
சிவகங்கையை அடுத்த உடையநாதபுரத்தை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (வயது 33). விவசாயி. இவருடைய மனைவி ஜோதி. இவர்களது 2 வயது ஆண் குழந்தை ரித்திக் (வயது 2).
நேற்று காலை 10 மணி அளவில் வீட்டில் கிடந்த ஒரு பொருளை எடுத்து ரித்திக் விழுங்கிவிட்டான். இதனால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடியது.
இதனால் பதறிய பெற்றோர் அவனை தூக்கிக்கொண்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். டாக்டர்களிடம் தனது மகனுக்கு 1 மணி நேரமாக மூச்சு திணறல் உள்ளதாகவும், ஏதோ பொருளை விழுங்கியதால் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
வட்ட வடிவ பேட்டரி
உடனடியாக காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு டாக்டர்கள், அந்த குழந்தையை பரிசோதித்து எக்ஸ்ரே எடுத்தார்கள். அப்போது, கழுத்து பகுதியில் வட்ட வடிவிலான ஒரு பொருள் இருப்பது தெரிந்தது. அதன் பிறகு கூர்ந்து ஆராய்ந்ததில் அது வட்ட வடிவிலான லித்தியம் பேட்டரி என தெரியவந்தது. இந்த பேட்டரி பொம்மைகளில் பொருத்தப்பட்டு இருக்கும்.
இதை தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவகல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதிபாலன் அறிவுறுத்தலின்படி அந்த குழந்தையை உடனடியாக அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்து சென்றனர்.
காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் நாகசுப்பிரமணியன், உதவி பேராசிரியர்கள் டாக்டர் விஜயகுமார், டாக்டர் ஜிம் திவாகர், மயக்க மருந்தியல் நிபுணர் டாக்டர் ரமேஷ் மற்றும் குழந்தைகள் டாக்டர் வினிபிரட் திரவியா ஆகியோர் நவீன மருத்துவ முறையை கையாண்டு, அந்த வட்ட வடிவிலான பேட்டரியை வெளியே எடுத்தனர். அதன்பின்னர் அந்த குழந்தை இயல்பு நிலைக்கு வந்தது. குழந்தையை காப்பாற்றிய டாக்டர்களுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
மருத்துவ குழுவினருக்கு பாராட்டு
இது குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் கூறியதாவது.:-
அந்த பேட்டரியில் உள்ள திரவமானது நச்சுத்தன்மை உடையதாகும், அது அதிக நேரம் குரல்வளையில் இருந்தால் குரல்வளை மிகவும் அரிக்கப்பட்டு நலிவு அடைந்திருக்கும். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்ததால் அதை வெளியே எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்ற முடிந்தது. மருத்துவமனைக்கு வந்த அரைமணி நேரத்தில் அந்த பேட்டரியை வெளியே எடுத்து விட்டோம். தொடர்ந்து அந்த குழந்தை டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கும். இ்ந்த சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவ குழுவினரை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story