ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலெக்டரிடம் மக்கள் நீதி மய்யத்தினர் மனு அளித்தனர்.
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலெக்டரிடம் மக்கள் நீதி மய்யத்தினர் மனு அளித்தனர்.
கலெக்டரிடம் மனு
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம், மக்கள் நீதி மய்யம் மாவட்ட துணை செயலாளர் மனோகர், நகர செயலாளர் அகோரம் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கிராமப்புறங்களில் ஆண்டுக்கு 4 முறை கிராமசபை கூட்டப்படுவதால், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்தாலோசிக்கும் வாய்ப்பு உருவாகிறது. மேலும், இதன்மூலம் கிராமப் பஞ்சாயத்தின் வரவு செலவுகள், உள்ளூரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகியவை பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரியவருகிறது.
ஏரியா சபை
கிராம சபைகளை போலவே நகரங்களிலும் பங்கேற்பு ஜனநாயகத்தை உருவாக்குவதற்காக, தமிழக அரசு சட்டம் இயற்றி உள்ளது. இந்த சட்டம் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மக்கள் பங்கேற்புடைய ‘ஏரியா சபை’ மற்றும் ‘வார்டு கமிட்டி’ அமைப்புகளை உருவாக்க வழி செய்கிறது.
இந்த சட்டம் உருவாக்கப்பட்டு 11 ஆண்டுகளாகியும் இதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான செயல்முறை விதிகள் உருவாக்கப்படாததால், தற்போதுவரை அமல்படுத்தப்படாமல் இருக்கிறது.
தமிழகத்தில் சுமார் 50 சதவீத மக்கள் நகர உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் வாழ்கின்றனர். மேற்கூறிய சட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி செயல்படுத்த வேண்டும். ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகளை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது கட்சி நிர்வாகிகள் மணிசங்கர், மணிபாரதி, விவேக், உமாசங்கர், ரங்கராஜ், சேகர், ஸ்ரீராமுலு, ராமகிருஷ்ணன், சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story