ராஜகோபால சுவாமி கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்


ராஜகோபால சுவாமி கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்
x
தினத்தந்தி 1 March 2022 12:46 AM IST (Updated: 1 March 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

நெல்லை:
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

ராஜகோபால சுவாமி கோவில்

நெல்லை பாளையங்கோட்டையில் வேதநாராயணன்-அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறும். அப்போது தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தேர் பழுதடைந்து ஓடாமல் இருந்தது. இதனால் சிறிய தேரில் ராஜகோபால சுவாமி வலம் வந்தார். பெரிய தேரை சரிசெய்து தேரோட்டம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

புதிய தேர் வெள்ளோட்டம்

இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெற்று கோபாலன் கைங்கர்ய சபாவினர் மூலம் பக்தர்களின் ஒத்துழைப்புடன் அழகிய மன்னர் ராஜகோபால சுவாமி கோவிலுக்கு 36 அடி உயரம், 14 அடி அகலம், 35 டன் எடை கொண்ட புதிய மரத்தேர் அமைக்கப்பட்டது. சக்கரம் 5 அடி உயரம் மற்றும் 5 அடுக்கு வேலைப்பாடுகளுடன் தேர் செய்யப்பட்டுள்ளது.


இந்த தேரில் தசாவதார சிற்பங்கள், 12 ஆழ்வார்களின் சிற்பங்கள், கண்ணன் லீலை உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. தேரின் முகப்பில் 4 குதிரை பொம்மைகள் பொருத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.

சிறப்பு அபிஷேகம்

முன்னதாக ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் தேரில் கும்பம் வைத்து தேர் வெள்ளோட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. தேர் இழுப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த சங்கிலி வடத்தை பிடித்து ஏராளமான பக்தர்கள் இழுத்தனர். தெற்கு பஜார் வழியாக தேர் 4 ரத வீதிகளையும் சுற்றி மதியம் 12.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சங்கர், பாளையங்கோட்டை ஆய்வாளர் பர்வீன் பாபி, ராஜகோபால சுவாமி கோவில் தக்கார் நல்லதாய், செயல் அலுவலர் ராம்குமார், கோபாலன் கைங்கர்ய சபா தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து மாற்றம்

பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர் ஓடிய சாலைகளில் தேர் கடக்கும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தேர் வெள்ளோட்டம் முடிந்தபின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தேர் வெள்ளோட்டத்தையொட்டி மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குட்டி உத்தரவின்பேரில் மின்சார வாரிய ஊழியர்கள் ரத வீதிகளில் மின்வயர்களை கழற்றி மீண்டும் மாட்டினார்கள்.

Next Story