பரவை பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
பரவை பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
மதுரை மாவட்டம் ஊர்மெச்சிகுளத்தைச் சேர்ந்த கலாமீனா, வின்சி உள்ளிட்ட 8 பேர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை பரவை பேரூராட்சியில் உள்ள 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் கடந்த 19-ந்தேதி நடந்தது. இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்களில் 8 பேரும், தி.மு.க. சார்பில் போட்டியிட்டதில் 6 பேரும், சுயேச்சை ஒருவர் என மொத்தம் 15 பேர் வெற்றி பெற்றுள்ளோம். வருகிற 4-ந்தேதி பரவை பேரூராட்சித் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
தற்போது பரவை பேரூராட்சியில் அ.தி.மு.க.வுக்கு பெரும்பான்மை கவுன்சிலர்கள் உள்ளனர். எனவே தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு இந்த கட்சியினர் தேர்வு செய்யப்படும் நிலை உள்ளது. ஆனால் ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், இந்த பதவிகளுக்கு தி.மு.க. கவுன்சிலர்களை நியமிக்கும் முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பதவிகளுக்கான தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறி, தி.மு.க.வினர் எங்களை மிரட்டி வருகின்றனர். இவர்களின் நடவடிக்கை குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. எனவே தி.மு.க.வினரின் மிரட்டலில் இருந்து தப்பிக்கும் வகையில் எங்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றும், எங்களை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் செல்லப் பாண்டியன், தினேஷ்பாபு ஆகியோர் ஆஜராகி, பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆளுங்கட்சியினர் அ.தி.மு.க.வினரை மிரட்டி வருவது சட்டவிரோத செயல். எனவே இதை தடுக்கும் வகையில் உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், மனுதாரர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
===========
Related Tags :
Next Story