எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் எழுச்சியோடு இருப்போம்


எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் எழுச்சியோடு இருப்போம்
x
தினத்தந்தி 1 March 2022 1:34 AM IST (Updated: 1 March 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

கைது, சிறை என்பது எங்களுக்கு புதிதல்ல என்றும், எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் எழுச்சியோடு இருப்போம் என்றும் விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

விழுப்புரம்

ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று காலை விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அர்ஜூனன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன், விழுப்புரம் நகர செயலாளர் வண்டிமேடு ராமதாஸ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி என்கிற ரகுராமன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, பேட்டை முருகன், கண்ணன், ராஜா, எசாலம் பன்னீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தவறான கணக்கு

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 10 மாதங்கள் ஆகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மறந்து, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது பற்றி துளியும் சிந்திக்காமல் அ.தி.மு.க.வை எப்படி அழிக்கலாம், முடக்கி விடலாம் என்று 24 மணி நேரமும் அதை பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறார். 
அ.தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தால் அவர்கள் சோர்ந்து விடுவார்கள், அந்த இயக்கத்தை அழித்து விடலாம் என்று தவறான கணக்கை போட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் நாங்கள் சோர்வடையாமல் இன்னும் எழுச்சியோடுதான் இருக்கிறோம்.  கைது, சிறை என்பது எங்களுக்கு புதிதல்ல. பொய் வழக்குகள் போட்டு அ.தி.மு.க.வை அழித்துவிடலாம், தொண்டர்களை பயமுறுத்திவிடலாம் என்று நினைத்தால் நீங்கள்தான் ஏமாந்து விடுவீர்கள். 
 
ஜனநாயகத்தின் தூண்

மீண்டும் தமிழகத்தை அ.தி.மு.க. ஆளும். இரட்டை இலை மீண்டும் முதல்-அமைச்சர் பதவியை அலங்கரிக்கும். அப்போது இன்று நீங்கள் செய்ததை அனுபவித்தே ஆக வேண்டும். நாங்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று பெருந்தன்மையுடன் இருக்க மாட்டோம், 
இன்றைக்கு ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. 

காவல்துறை உள்ளிட்ட அரசின் அனைத்துத்துறை அமைப்புகளும் தி.மு.க.வின் அமைப்பாக மாறியிருக்கிறது. அதுபோல் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதித்துறையும் இன்று அச்சுறுத்தப்பட்டு வருகிறது. 
அ.தி.மு.க. எப்போதெல்லாம் தோல்வியை சந்திக்கிறதோ அதன் பிறகு வருகிற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது, இது வரலாறு. இந்த வரலாற்றை நீங்கள் புரட்டிப்பாருங்கள், உங்களது எதிர்காலத்தையும் சற்று நினைத்து பாருங்கள். மக்கள் ஏமாந்து ஒருமுறை உங்களுக்கு ஒருவாய்ப்பு அளித்துவிட்டனர். உங்களை நம்பி வாக்களித்த ஏழை, எளிய மக்களுக்கு என்ன நன்மைகள் செய்ய முடியுமோ அதை செய்யுங்கள், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுங்கள். 

சமூக நீதி

அதை விட்டுவிட்டு எங்கள் தலைவர்களை கைது செய்வதிலேயே நேரத்தை செலவிட்டு வீணாக்காதீர்கள். தந்தை, மகன், பேரன் என்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க.விற்கு, சமூக நீதி பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?. 
இவ்வாறு அவர் பேசினார்.



Next Story