உக்ரைனில் இருந்து ஊர் திரும்பியது எப்படி?
உக்ரைனில் இருந்து ஊர் திரும்பிய அருப்புக்கோட்டை மாணவர் அங்குள்ள நிலவரம் குறித்து பேட்டி அளித்தார்.
அருப்புக்கோட்டை,
உக்ரைனில் இருந்து ஊர் திரும்பிய அருப்புக்கோட்டை மாணவர் அங்குள்ள நிலவரம் குறித்து பேட்டி அளித்தார்.
அருப்புக்கோட்டை மாணவர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஜோதிபுரத்தை சேர்ந்த கண்ணன்-உமாமகேகசுவரி என்ற தம்பதியரின் மகன் ஹேமந்த்குமார் (வயது 18). இவர் உக்ரைனில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
இந்தநிலையில் உக்ரைன் மீது, ரஷியா போர்த்தொடுத்து உள்ளதால், நாடு திரும்ப முடியாமல் தவித்தார். இதனால் அவருடைய குடும்பத்தினரும் கவலையில் இருந்தனர். இந்த நிலையில் உக்ரைனில் இருந்து மாணவர்களை அழைத்து வருவதற்காக மத்திய அரசு அனுப்பிய சிறப்பு விமானம் மூலம் ேஹமந்த்குமார், டெல்லி வந்து தற்போது ஊர் திரும்பி உள்ளார். அவரை பெற்றோர் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.
உக்ரைன் நிலவரம் பற்றி மாணவர் ஹேமந்த்குமார் கூறியதாவது:-
உக்ரைன் நாட்டில் உஸ்ஹரோடு நேஷனல் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறேன். கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதிதான், இந்த பல்கலைக்கழகத்தில் சேர்த்தேன்.
சிறப்பு விமானங்கள்
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலை முதல் ரஷியா- உக்ரைன் போர் தீவிரம் அடைந்தது. அந்த சமயத்தில் எங்களை பல்கலைக்கழக விடுதியில் பத்திரமாக தங்க வைத்திருந்தனர். இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்குவதாக, பல்கலைக்கழகத்தில் இருந்த சக மாணவர்கள் தெரிவித்தனர். அங்கிருந்து எப்படியாவது வெளியேறி சொந்த ஊருக்கு வந்து விட வேண்டும் என எண்ணினோம்.
போர்க்காலம் என்பதால் அங்குள்ள அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளிலும் எல்லா பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்திருந்தது. குறிப்பாக பிஸ்கெட், பிரட் போன்ற உணவு பொருட்களை அங்குள்ள உக்ரைன் மக்கள், வீடுகளில் அதிகம் வாங்கி சேமிக்க தொடங்கினர். மேலும் நாங்கள் இருந்தது உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதி என்பதால் போர் தீவிரம் அங்கு இல்லை. ஆனால், கிழக்கு பகுதியில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்ததால் எங்கள் பகுதிக்கும் போர் பரவுேமா என்ற அச்சத்திலேயே இருந்தோம். இதற்கிடையே, 26-ந் தேதி காலை 9 மணிக்கு இந்தியா புறப்படுவதற்கு சிறப்பு விமானங்கள் அண்டை நாடான ஹங்கேரியில் தயாராக இருப்பதாக கூறினார்கள்.
டெல்லி வந்தோம்
முதலாம் ஆண்டு மாணவர்கள், 2-ம் ஆண்டு மாணவர்கள் என வரிசையாக விமானத்தில் அழைத்து செல்வதாகவும் அறிவித்தனர். அதற்காக நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து ஹங்கேரி நாட்டு எல்லைக்கு சென்றோம். அங்கு எங்களை தீவிரமாக கண்காணித்து பல்வேறு கட்டங்களாக சோதனை செய்தனர். மேலும், இந்திய தூதரகத்தில் இருந்தும் அதிகாரிகள் வந்து சோதனை செய்தனர். அதன்பின்னர் பஸ்சில் புறப்பட்டு சுமார் 4½ மணி நேரம் பயணம் செய்து, ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரத்தின் விமான நிலையத்திற்கு வந்தடைந்தோம். அங்கு இந்திய விமானம் தயாராக இருந்தது. என்னுடன் அந்த விமானத்தில் 240 பேர் பயணித்தனர். அதில் 12 பேர் தமிழக மாணவர்கள். அதன்பின்னர், மறு நாள் காலையில் 9 மணிக்கு டெல்லிக்கு வந்தோம். உக்ரைனில் இருந்து வேறு விமானத்தில் சில தமிழக மாணவர்கள் வருவதாக கூறியதால் டெல்லி விமான நிலையத்தில் என்போன்ற தமிழக மாணவர்கள் காத்திருந்தோம். பின்னர் அவர்களும் வந்த பின்னர் டெல்லியில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு சென்னை வந்தோம். அங்கிருந்து அனைத்து மாணவர்களும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரிந்து சென்றனர். நானும், மதுரையை சேர்ந்த மாணவர் ஒருவரும் காரில் புறப்பட்டோம். நேற்று காலை 8 மணியளவில் அருப்புக்கோட்டையை அடைந்தேன்.
முக்கிய ஆவணங்கள்
போர் சூழ்நிலை காரணமாக படிப்புகள் மார்ச் மாதம் 13-ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், ஆன்லைன் மூலம் படிப்பு தொடரும் என பல்கலைக்கழகத்தினர் அறிவித்துள்ளனர். ஆனால், என்ன நடக்கப்போகிறது என்பது சரியாக தெரியவில்லை.
அதிகமாக பொருட்களை எடுத்து கொண்டு வர முடியாது என்பதால் முக்கியமான பொருட்களை மட்டுமே எடுத்து விட்டு செல்லும்படி அறிவுறுத்தினர். அதன்படி, விமான பயணத்திற்கு தேவையான ஆவணங்கள், கல்லூரி ஆவணங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை மட்டுமே எடுத்து கொண்டு வந்திருக்கிறோம். மீதமுள்ள பொருட்களை விடுதியில் அறையில் வைத்திருக்கிறோம்.
மீட்க கோரிக்கை
உக்ரைனின், கிழக்குப்பகுதியான கார்கிவ், கீவ் பகுதிகளில் ஏராளமான தமிழக மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். உக்ரைனில் உள்ள 19 பல்கலைக்கழகங்களில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களும், தமிழக மாணவர்களும் படிக்கின்றனர். அவர்களுக்கு சாப்பாடு கிடைக்காமல் தவிக்கின்றனர். தமிழக மாணவர்கள் பதுங்கு குழிகளில் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களையும் மத்திய மாநில அரசுகள் மீட்க வேண்டும். நாங்கள் அங்கிருந்து வந்ததற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story