தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
களக்காடு அருகே தந்தை-மகனை குத்திக் கொன்ற தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
நெல்லை:
களக்காடு அருகே தந்தை-மகனை குத்திக் கொன்ற தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
தகராறு
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 52). கூலித்தொழிலாளி. இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த நம்பிகோனார் என்பவருடைய தங்கை பொன்னம்மாளை திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் பொன்னம்மாளுக்கும், பாலையாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து பொன்னம்மாள் தனது அண்ணன் நம்பி கோனாரிடம் கூறினார்.
தந்தை-மகன் கொலை
கடந்த 12-2-2014 அன்று பொன்னம்மாளுக்கும், பாலையாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நம்பிகோனார், பாலையா வீட்டுக்கு சென்று, ஏன் எனது தங்கையிடம் தகராறு செய்கிறாய் என்று கேட்டார். அப்போது நம்பிகோனாருக்கும், பாலையாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பாலையா கத்தியால் நம்பிகோனாரை குத்தினார். இதை தடுக்க சென்ற நம்பிகோனாரின் மகன் ரமேசையும் கத்தியால் குத்தினார். இதில் இருவரும் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தின்போது நம்பிகோனாரின் மனைவி நம்பிஅம்மாளுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார்.
இரட்டை ஆயுள் தண்டனை
இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலையாவை கைது செய்து நெல்லை மாவட்ட முதலாவது செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட பாலையாவுக்கு கொலை குற்றத்துக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், நம்பியம்மாளை தாக்கிய வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனையும், மற்றொரு பிரிவில் 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ராமமூர்த்தி ஆஜரானார்.
Related Tags :
Next Story