கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க வந்த குடும்பத்தினரால் பரபரப்பு
கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க வந்த குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவரது மனைவி செந்தமிழ்செல்வி. இவர்கள் மற்றும் இவர்களது குடும்பத்தினர் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வந்தபோது, செந்தமிழ்செல்வி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரது குடும்பத்தினரும் உடலில் மண்எண்ணெயை ஊற்ற முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து மண்எண்ணெய் பாட்டிலை பறித்து செந்தமிழ்செல்வி மீது தண்ணீரை ஊற்றினர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில், தங்களது வீட்டில் நோயாளிகள் உள்ள நிலையில், வீட்டுக்கு அருகில் மரப்பட்டறை செயல்பட்டு வருவதால், தங்களது குடும்பத்தினர் மேலும் அவதிப்பட்டு வருகிறோம். மரப்பட்டறையில் இருந்து வெளியேறும் துகள்களால் அப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு விதமான சுவாச பிரச்சினைகள் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. தங்களது குடும்பமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரியலூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாளுக்கு நாள் தங்களின் நோய் அதிகமாகிறது. இதனால் தீக்குளிக்க முயன்றோம் என்று, அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் அந்த குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து மரப்பட்டறையை அகற்றி தங்களையும், பொதுமக்களையும் காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர் ஏற்கனவே மரப்பட்டறையை அகற்றக்கோரி சாலையில் சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story