ரூ.20 லட்சம் நகைகள் திருடிய பெண் ஊழியர்
வள்ளியூரில் வேலை செய்த கடையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகளை திருடிய பெண் ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வள்ளியூர்:
வள்ளியூரில் வேலை செய்த கடையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகளை திருடிய பெண் ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகைக்கடை
நெல்லை மாவட்டம் வள்ளியூர் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). இவர் வள்ளியூர் ராதாபுரம் மெயின் ரோட்டில் பழைய பஸ் நிலையம் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார்.
இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக கடைக்கு சரியாக வரவில்லை. ஒரு கட்டத்தில் கடையில் உள்ள நகைகளின் இருப்பை அவர் சரிபார்த்தார். அப்போது அவற்றில் சில நகைகள் காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கண்காணிப்பு கேமரா
இதையடுத்து நகைகள் மாயமானது எப்படி என்பதை அறிவதற்காக, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது நகைக்கடையில் வேலை பார்க்கும் பணகுடி அருகே உள்ள கோரியூரை சேர்ந்த சுபா என்ற பெண்ணின் தாயார் அடிக்கடி கடைக்கு வந்து சென்றது தெரியவந்தது.
ரூ.20 லட்சம் நகைகள்
இதையடுத்து சுபா மீது ராமச்சந்திரனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து அவர் கடையில் வைக்கப்பட்டு இருந்த அனைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களின் இருப்பு விவரத்தை சரிபார்த்தார்.
அப்போது 47 பவுன் தங்க நகைகளும், 4 கிலோ எடை கொண்ட வெள்ளி நகைகளும் காணாமல் போய் இருப்பது தெரியவந்து உள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் ஆகும்.
தலைமறைவு
இதை அறிந்ததும் சுபா வேலைக்கு வராமல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து கடையில் தங்க, வெள்ளி நகைகளை திருடி சென்றதாக சந்தேகத்தின் பேரில் சுபா மீது வள்ளியூரில் போலீஸ் நிலையத்தில் ராமச்சந்திரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சுபாவை வலைவீசி தேடி வருகின்றனர்.
தான் வேலை செய்த கடையிலேயே ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகளை பெண் ஊழியர் திருடி சென்ற சம்பவம் வள்ளியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story