உக்ரைனில் சிக்கி தவித்த மேலும் 6 மாணவர்கள் கர்நாடகம் திரும்பினர்


உக்ரைனில் சிக்கி தவித்த மேலும் 6 மாணவர்கள் கர்நாடகம் திரும்பினர்
x
தினத்தந்தி 1 March 2022 2:40 AM IST (Updated: 1 March 2022 2:40 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் சிக்கி இருப்பவர்களில் மேலும் 6 மாணவர்கள் கர்நாடகம் திரும்பியுள்ளனர். இதனால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூரு: உக்ரைனில் சிக்கி இருப்பவர்களில் மேலும் 6 மாணவர்கள் கர்நாடகம் திரும்பியுள்ளனர். இதனால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.

6 பேர் நாடு திரும்பினர்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் அங்கு சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் தொடங்கியுள்ளது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதுபோல் உக்ரைனில் சிக்கி தவிக்கும் கன்னடர்களை மீட்டு வருவதற்காக மனோஜ் ராஜன், கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையும் பெங்களூருவில் செயல்பட்டு வருகிறது. 

உக்ரைனில் சிக்கி தவித்த 31 கன்னடர்கள் நேற்று முன்தினம் வரை நாடு திரும்பி இருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் 6 பேர் நாடு திரும்பினர்.
இதன் மூலம் இதுவரை உக்ரைனில் இருந்து கர்நாடகம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள கன்னடர்களின் எண்ணிக்கை 346 ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 451 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக இயற்கை பேரிடர் நிர்வாக ஆணைய கமிஷனர் மனோஜ் ராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயண செலவுகள்

உக்ரைனில் இருந்து விமானங்கள் மூலம் டெல்லி மற்றும் மும்பைக்கு வரும் கர்நாடக மாணவர்களுக்கு உதவி செய்ய அந்த விமான நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து அந்த மாணவர்களை விமானம் மூலம் பெங்களூரு அழைத்து வரும் பயண செலவுகளை அரசே ஏற்று கொண்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள மீதமுள்ள கர்நாடக மாணவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறையுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். உக்ரைனில் உள்ள கர்நாடக மாணவர்கள், தூதரகம் கூறும் அறிவுரைப்படி நடந்து கொள்ள வேண்டும். தவறான தகவல்களை நம்பி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அதிகாரப்பூர்வமாக வெளிவரும் தகவல்களை மட்டுமே மாணவர்கள் நம்ப வேண்டும்.
இவ்வாறு மனோஜ் ராஜன் கூறியுள்ளார்.

Next Story