‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 1 March 2022 2:59 AM IST (Updated: 1 March 2022 2:59 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குப்பைகளை அகற்ற வேண்டும் 

 கோபியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே ஒரு ரோடு உள்ளது. இந்த ரோட்டின் ஓரம் குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் அந்த ரோட்டில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே ரோட்டோரம் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 பொதுமக்கள், கோபி.
  
தடுப்பு கம்பி அமைக்கப்படுமா? 
 
 ஈரோடு சென்னிமலைரோடு கே.கே.நகர் பகுதியில் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. இந்த பாலத்தில் அதிக உயரம் கொண்ட கனரக வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் பாலத்துக்கு சிறிது தூரத்துக்கு முன்பு தடுப்பு கம்பி அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு லாரி மோதி தடுப்பு கம்பி உடைந்து விழுந்தது. அதன்பிறகு கம்பி மீண்டும் பொருத்தப்படவில்லை. இதனால் உயரமான வாகனங்கள் செல்லும்போது வாகனத்தின் மீது மோதும் அபாயம் உள்ளது. எனவே நுழைவு பாலத்தின் முன்பு தடுப்பு கம்பி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  காயத்திரி, மூலப்பாளையம்.
  
பழுதடைந்த குடிநீர் தொட்டி

  பெருந்துறை ஒன்றியம் பெத்தாம்பாளையம் பேரூராட்சி செங்கோடம்பாளையத்தில் அமைந்துள்ள குடிநீர் தொட்டி பழுதடைந்துவிட்டது இதனால் அதன் அருகில் புதிதாக ஒரு மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அதில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனினும் இடிந்து விழும் நிலையில் உள்ள பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி இதுவரை இடித்து அகற்றப்படவில்லை. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பழுதடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
  பொதுமக்கள், செங்கோடம்பாளையம்.
  
தார்ரோடு வேண்டும் 

  ஈரோடு கனிராவுத்தர் குளம் அருகில் உள்ள நந்தவன தோட்டம் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் தார்ரோடுகள் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைகிறார்கள். இதேபோல் இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதியும் இல்லை. எனவே நந்தவன தோட்டம் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
  ஸ்ரீதர், ஈரோடு.
  
வாய்க்கால் கரையில் குப்பை 

  ஈரோடு கனிராவுத்தர் குளம் செங்குந்தர் நகரில் கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் கரையில் சிலர் குப்பைகளை கொட்டி சென்று விடுகிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் காற்று அடிக்கும் போது இந்த குப்பைகள் காற்றில் பறந்து அந்த வழியாக செல்பவர்கள் மீது படுகிறது. எனவே வாய்க்கால் கரையில் உள்ள குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  அப்துல், ஈரோடு.
  
சுத்தப்படுத்தப்படுமா?

  ஈரோடு தாசில்தார் அலுவலகம் முன்பு பொதுமக்கள் குடிப்பதற்காக தண்ணீர் தொட்டி உள்ளது. பல மாதங்களாக இந்த தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. மேலும் தண்ணீரும் நிரப்பப்படவில்லை. கோடை தொடங்கிவிட்ட நிலையில் பொதுமக்கள் தாகம் தீர்க்க தாசில்தார் அலுவலகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து, அதில் தண்ணீர் நிரப்ப வேண்டும்.
  இளங்கோ, ஈரோடு.
  
  
பாராட்டு

  மொடக்குறிச்சி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி ஊராட்சி கீரமடை பகுதியில் தவசியப்பன் கோவில் தெருவில் சாக்கடைகளில் கழிவுகள் தேங்கி கிடந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தினர் சாக்கடையை தூர்வாரியுள்ளார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பாலமுருகன், கீரமடை.



Next Story