பள்ளியில் உள்ள பழைய கட்டிடத்தை அகற்றக்கோரி மாணவ- மாணவிகள் பெற்றோருடன் சாலை மறியல்
சத்தியமங்கலத்தில் பள்ளியில் உள்ள பழைய கட்டிடத்தை அகற்றக்கோரி மாணவ-மாணவிகள் பெற்றோருடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் பள்ளியில் உள்ள பழைய கட்டிடத்தை அகற்றக்கோரி மாணவ-மாணவிகள் பெற்றோருடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி பள்ளி
சத்தியமங்கலத்தில் போலீஸ் நிலையம் அருகே நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. மழலையர் பள்ளி முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 300 குழந்தைகள் மற்றும் மாணவ-மாணவிகள் இங்கு படிக்கிறார்கள்.
இந்த பள்ளியின் ஒரு பகுதியில் ஆங்கிலேயர் காலத்து நீதி மன்ற கட்டிடம் ஒன்று உள்ளது. அதன்பின்னர் அங்கு தொடக்கப்பள்ளி செயல்பட்டது. மேலும் கட்டிடம் பழுதானதால் வகுப்பறைகள் வேறு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டன. ஆனால் பாழடைந்த கட்டிடம் இடிக்கப்படாமல் உள்ளது.
மதிய உணவு நேரத்தில் குழந்தைகள் பலர் இந்த கட்டிடத்தில் அமர்ந்து சாப்பிடுவதாக கூறப்படுகிறது. மேலும் ஆபத்தை உணராத குழந்தைகள் இங்குவந்து விளையாடுவதும் தெரியவந்துள்ளது. இதனால் இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
சாலை மறியல்
இந்தநிலையில் நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் நேற்று காலை 9 மணி அளவில் ஒன்று திரண்டு சத்தி-பண்ணாரி ரோட்டுக்கு வந்தார்கள். பின்னர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள். போலீஸ் நிலையம் அருகிலேயே இருப்பதால் போலீசார் வந்து சாலை மறியலில் ஈடுபடக்கூடாது என்றார்கள். ஆனால் மாணவ-மாணவிகள் நகராட்சி அதிகாரிகள் இங்கு வரட்டும் என்று போராட்டத்தை தொடர்ந்தார்கள்.
இதனால் வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மாற்றுப்பாதையில் வாகனங்களை திருப்பி விட்டார்கள்.
பேச்சுவார்த்தை
அதன்பின்னர் நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவ-மாணவிகளிடமும், பெற்றோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பெற்றோர்கள் பள்ளியில் உள்ள பழைய கட்டிடத்தை உடனே இடித்து அகற்ற வேண்டும். கழிப்பறைகள் சுத்தப்படுத்துவதில்லை என்று குழந்தைகள் கூறுகிறார்கள். அவர்கள் விளையாட மைதானம் இல்லை என்று புகார் கூறினார்கள்.
இதையடுத்து ஆணையாளர் சரவணக்குமார் உடனடியாக பழுதடைந்த கட்டிடத்துக்குள் யாரும் செல்லாதவாறு மூங்கில் தடுப்புகள் அமைக்கப்படும். அதன்பின்னர் கட்டிடத்தை சீரமைக்கிறோம். கழிப்பறையை உடனே சுத்தம் செய்ய ஆவன செய்கிறோம். குழந்தைகள் விளையாட மைதான வசதியும் செய்து தரப்படும் என்றார்.
அதையடுத்து காலை 10 மணியளவில் சாலை மறியல் கைவிடப்பட்டது. மாணவ-மாணவிகள் வகுப்பறைக்கு சென்றார்கள்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story