‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 March 2022 3:40 AM IST (Updated: 1 March 2022 3:40 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருநாய்கள் தொல்லை
கிருஷ்ணகிரி நகர்ப்புற பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களையும், பள்ளி செல்லும் மாணவர்களையும் தெருநாய்கள் துரத்தி துரத்தி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
-சந்திரன், கிருஷ்ணகிரி.
==
குடிநீர் பிரச்சினை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா செட்டியூர் கிராமத்தில் பொதுமக்களின் தேவைக்காக அங்குள்ள ஆலமரத்தின் அருகே ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் 6 மாதகாலமாக தண்ணீர் இல்லை. அந்த பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி சிரமப்படுகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், செட்டியூர், தர்மபுரி.

சேலம் மாவட்டம் கொளத்தூர் கோவில்பாளையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி ஒன்று மின்மோட்டாருடன் அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இது பற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. மின்மோட்டாரை சரிசெய்து இந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
குமார், கொளத்தூர்.
==
தெருவிளக்கு எரியவில்லை

சேலம் மேற்கு, கந்தம்பட்டி, ராஜீவ்நகரில் கடந்த சில நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் மையமாக காட்சி அளிக்கிறது. பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து தெருவிளக்கை எரிய செய்ய வேண்டும்.
-மா.பிரகாஷ், ராஜீவ்நகர், சேலம்.
==
போக்குவரத்து நெரிசல்

சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் தலைமை தபால் நிலையம் முன்பு சிலர் வாகனங்களை நிறுத்தியும், கடைகள் வைத்தும் ஆக்கிரமித்துள்ளனர். இந்த பகுதி ஒரு வழிப்பாதை என்பதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.
-முரளி, சேலம்.
==

சாலை சரிசெய்யப்படுமா?

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சாைல அமைக்கபட்டது. இந்த சாலை வழியாகத்தான் பஞ்சாயத்து அலுவலகம், கிராம உதவியாளர் அலுவலகம், கிராம சுகாதார செவிலியர் அலுவலகம் ஆகியவற்றுக்கு செல்ல வேண்டும். தற்போது இந்த சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த சாலையை சரிசெய்து தரவேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
-சிவா, அதியமான் கோட்டை, தர்மபுரி.

Next Story