மல்லூர் அருகே குட்டையில் மூழ்கிய புதுமாப்பிள்ளை உடல் மீட்பு


மல்லூர் அருகே குட்டையில் மூழ்கிய புதுமாப்பிள்ளை உடல் மீட்பு
x
தினத்தந்தி 1 March 2022 3:54 AM IST (Updated: 1 March 2022 3:54 AM IST)
t-max-icont-min-icon

மல்லூர் அருகே குட்டையில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலியானார். அவரது உடல் மீட்கப்பட்டது.

பனமரத்துப்பட்டி:
மல்லூர் அருகே குட்டையில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலியானார்.  அவரது உடல் மீட்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
புதுமாப்பிள்ளை
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா புதுப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த சின்னசாமி மகன் சிவகுமார் (வயது 25). இவருக்கும், நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை சேர்ந்த பெரியசாமி மகள் சரஸ்வதிக்கும் (21) கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
புதுமண தம்பதியான இவர்கள், மல்லூர் அருகே சந்தியூர் ஆட்டையாம்பட்டியில் உள்ள சின்ன மாமனார் வீட்டிற்கு நேற்று முன்தினம் விருந்துக்கு வந்துள்ளனர். மாலை 4 மணி அளவில் சிவகுமார், சரஸ்வதி மற்றும் அவர்களது உறவினர்கள் அங்குள்ள குட்டையில் குளிக்க சென்றனர்.
மூழ்கி பலி
குட்டையில் குளித்து கொண்டிருந்த போது சிவகுமார் திடீரென குட்டையில் மூழ்கினார். இதைக்கண்ட சரஸ்வதி சத்தம் போட்டு கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் உள்ள அவருடைய உறவினர்கள் சிவகுமாரை மீட்க முயன்றனர். அதற்குள் சிவகுமார் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி விட்டார். தகவல் அறிந்த சேலம் மற்றும் மல்லூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சிவகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு இரவு 11 மணி அளவில் சிவகுமாரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். பின்னர் சிவகுமார் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருமணமான 20 நாளில் மனைவி கண்முன்னே புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story