நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர்  கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 March 2022 4:34 AM IST (Updated: 1 March 2022 5:01 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்:
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தி.மு.க. பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. 
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ. அசோகன் (கிழக்கு), ஜான் தங்கம் (மேற்கு) ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர்.
இதில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், அவைத் தலைவர்கள் சேவியர் மனோகரன், சிவ குற்றாலம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ், அணி செயலாளர் சுகுமாரன், மாநகர செயலாளர் சந்துரு, மாவட்ட கவுன்சிலர் நீல பெருமாள், குளச்சல் நகர அ.தி.மு.க. செயலாளர் ஆண்ட்ரோஸ் மற்றும் ஸ்ரீலிஜா அக்சயா கண்ணன், கோபால் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
பேட்டி
பின்னர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் அழகியபாண்டியபுரம், இரணியல் மற்றும் குழித்துறை ஆகிய கூட்டு குடிநீர் திட்டங்கள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சி எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. சாலைகள் குண்டும் குழியுமாக பொதுமக்கள் நடக்க முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. நாகர்கோவிலில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. புத்தன் அணை குடிநீர் திட்டத்தை செயல்படுத்தாமல் அரசு கிடப்பில் போட்டுள்ளது. 
மேம்பாலம் வேண்டும்
 ஆரல்வாய்மொழி குருசடி பகுதியில் 4 வழி சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
தி.மு.க. அரசு கடந்த பொங்கல் பண்டிகையொட்டி வழங்கிய தொகுப்பில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் பொய்யான பிரசாரங்களை செய்து வெற்றிபெற்றுள்ளனர்.
அமோக வெற்றி
2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. குமரி மாவட்டத்தில் அமோக வெற்றி பெறும். இதேபோல் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறுவது உறுதி.
தற்போது நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த அ.தி.‌மு.‌க. வினர் துவண்டு விடக்கூடாது. தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும்.
தி.மு.க. அரசு தற்போது முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story