மேயர் பதவியை பிடிக்க பா.ஜனதாவும் களம் இறங்கியது
நாகர்கோவில் மாநகராட்சியில் மேயர் பதவியை பிடிக்க பா.ஜனதாவும் களம் இறங்கி, அ.தி.மு.க. ஆதரவை பெற்றுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சியில் மேயர் பதவியை பிடிக்க பா.ஜனதாவும் களம் இறங்கி, அ.தி.மு.க. ஆதரவை பெற்றுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் நகராட்சியாக இருந்து வந்த நிலையில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு நாகர்கோவில் மாநகராட்சிக்கு முதல் முறையாக கடந்த 19-ந்தேதி தேர்தல் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளில் பதிவான வாக்குகள் கடந்த 22-ந்தேதி எண்ணப்பட்டது.
இதில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகிய கூட்டணி கட்சிகள் 32 இடங்களையும், அ.தி.மு.க. 7 இடங்களையும், பா.ஜனதா 11 இடங்களையும், சுயேச்சைகள் 2 இடங்களையும் கைப்பற்றினர். இதில் தி.மு.க. கூட்டணி 32 இடங்களை பிடித்ததால் மேயர் பதவியை தி.மு.க. எளிதாக கைப்பற்றும் நிலை உள்ளது.
பா.ஜனதாவும் களம் இறங்கியது
இந்தநிலையில் நாகர்கோவில் மாநகராட்சியில் 11 இடங்களை பிடித்துள்ள பா.ஜனதா கட்சி மேயர் பதவியை பிடிக்க களம் இறங்கியுள்ளது. பா.ஜனதா கட்சி சார்பில் மேயர் பதவிக்கு மீனாதேவ் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே நாகர்கோவில் நகரசபை தலைவியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு ஆதரவு திரட்டும் பணியில் பா.ஜனதா கட்சியினர் முழு மூச்சுடன் இறங்கி உள்ளனர். அவர்கள் அ.தி.மு.க. கவுன்சிலர்களின் ஆதரவை பெற முடிவு செய்தனர்.
தளவாய்சுந்தரத்துடன் சந்திப்பு
அதைத்தொடர்ந்து நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்த அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வை நேற்று மீனாதேவ் மரியாதை நிமித்தமாக சந்தித்து, அவருக்கு பொன்னாடை அணிவித்தார்.
பின்னர் அவர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் தனக்கு அ.தி.மு.க. ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
அ.தி.மு.க. ஆதரவு
அதைத்தொடர்ந்து தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க, நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மேயர் வேட்பாளர் மீனாதேவுக்கு, அ.தி.மு.க. சார்பில் முழு ஆதரவு தரப்படும். அவர் மாநகரின் மேயராக எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story