வீடுதோறும் காய்கறி பழங்கள் விற்பனை
வீடுதோறும் காய்கறி பழங்கள் விற்பனை
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வீடுதோறும் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் திட்டத்துக்கு வாகனங்கள் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.
காய்கறி விற்பனை
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
விவசாயிகள் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்பவர்களாக மட்டும் இல்லாமல் தங்கள் விளைபொருட்களை இடைத்தர்கள் இல்லாமல் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உழவர் சந்தை திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. கொரோனா ஊரடங்கு காலங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக வீட்டுக்கே விற்பனை செய்த முயற்சி நுகர்வோர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்த சேவையை விரிவுபடுத்த சென்னை, திருச்சி, கோவை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் விவசாயிகள் தோட்டத்தில் சாகுபடியாகும் காய்கறிகள் மற்றும் பழங்களை பசுமை மாறாமல் நுகர்வோருக்கு வீடுதோறும் வழங்கும் வசதியாக Farm to Home என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
விண்ணப்பிக்கலாம்
இந்த திட்டத்தில் கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் நடமாடும் வாகனங்கள் வாங்குவதற்கு 40 சதவீதம் மானியம் அல்லது ரூ.2 லட்சம் நிதி உதவி அரசு மூலம் வழங்கப்படும். திருப்பூர் மாநகராட்சியில் 6 நடமாடும் வாகனங்கள் மூலமாக 60 வார்டுகளுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் விளைபொருட்களுக்கு விற்பனை விலை அருகில் உள்ள உழவர் சந்தை விலையில் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் வாகனங்கள் வாங்குவதற்கான மானியம் பெற பயனாளிகள் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு மூலம் தேர்வு செய்யப்படும்.
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், 21 வயது முதல் 45 வயது வரை உள்ள இளம் விவசாயிகள், சொந்தமாக அல்லது குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள் நில உடமை சான்று, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பயனாளிகளுக்கு ஒரு வாகனத்திற்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் விண்ணப்பத்தை திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள தெற்கு உழவர் சந்தை அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தை வருகிற 10-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Related Tags :
Next Story