தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 1 March 2022 6:02 PM IST (Updated: 1 March 2022 6:02 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

அகற்றப்பட்ட குப்பைகள்

காஞ்சீபுரம் மாவட்டம் திருகாலிமேடு செட்டியார் குளம் பகுதியில் குப்பை தொடர்ந்து கொட்டப்படுவது குறித்த செய்தி ‘தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து காஞ்சீபுரம் நகராட்சி நிர்வாக ஊழியர்கள் விரைந்து எடுத்த நடவடிக்கையால் குப்பைகள் அகற்றப்பட்டது. நகராட்சி ஊழியர்களின் உடனடி நடவடிக்கைக்கும், செய்தியை வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்தனர்.

சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் மூடி

சென்னை மாதவரம் வினாயகபுரம் காமராஜர் முதல் குறுக்கு தெருவில் கழிவுநீர் கால்வாயின் சிமெண்ட் மூடி சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமென்றாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயின் மூடியை கடந்து தான் இந்த தெருமக்கள் வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. விபத்து எதுவும் ஏற்படும் முன்பு மாநகராட்சி கவனித்து சரி செய்ய வேண்டும்.

- தெரு மக்கள்.

சாலை தடுப்புகளில் வாடிப்போன செடிகள்

சென்னை எல்லையம்மன் கோவிலில் இருந்து தியாகராயநகர் செல்லும் சாலையின் நடுவே சாலை தடுப்புகளில் இருக்கும் செடிகளுக்கு போதுமான தண்ணீர் விடாததால் செடிகள் வாடி போய் பரிதாபமாக காட்சியளிக்கிறது. இந்தநிலை தொடருமானால் செடிகள் அனைத்தும் வீணாகி போய்விடும். எனவே தினசரி போதிய அளவு தண்ணீர் விடுவதற்கு துறை சார்ந்த நடவடிக்கை தேவை.

- ரவிகுமார், சமூக ஆர்வலர்.

சுகாதார சீர்கேடு தடுக்கப்படுமா?

சென்னை தண்டையார்பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில் தெரு மெயின் ரோட்டில் குப்பைகள் குவிந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. குப்பைகள் அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதிகாரிகள் கவனித்து சுகாதார சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- பொதுமக்கள்.



நிழற்குடை வேண்டும்

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இங்கிருந்து கோயம்பேடு, பிராட்வே, தியாகராயநகர், திருவான்மியூர் என முக்கிய இடங்களுக்கு செல்ல வரும் பள்ளி மாணவ-மாணவிகள், முதியோர், குழந்தைகள் உட்பட அனைத்து பயணிகளும் நிழற்குடை வசதி இல்லாததால் சாலையிலேயே நிற்கும் நிலையுள்ளது. வெயில் மற்றும் மழை காலங்களில் இப்பகுதியில் பஸ் ஏறுவதற்கு பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பயணிகள் பயன்பாட்டிற்காக நிழற்குடை அமைத்து தர வேண்டும்.

- மீஞ்சூர் கோதை ஜெயராமன், நசரத்பேட்டை.



திறந்த நிலையில் வடிகால்வாய்

சென்னையை அடுத்த திருமுல்லைவாயில், தேவி நகர் 60 அடி ரெயில்வே சாலையும் சிவகாமி தெருவும் சந்திக்கும் இடத்தில் உள்ள 2 மழைநீர் வடிகால்வாய்கள் மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளன. குழந்தைகள், முதியோர் அதிகம் பயன்படுத்தும் பாதை என்பதால் விபரீதம் எதுவும் ஏற்படும் முன்பு ஆவடி மாநகராட்சி நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும்.

- சாலைவாசிகள்.



தெருவில் நாய் தொல்லை

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர், சாலமன் தெருவில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்களையும் குறைத்தும், கடிக்க வருவதும் தொடர்ந்து வருகிறது. மேலும் வாகன ஓட்டிகளை துரத்தியும் சிரமப்படுத்துகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- பைசூல் ரகுமான், சமூக ஆர்வலர்.

முழுமையடையாத கால்வாய்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிளிக்கோடி கிராமத்தில் சாக்கடை கால்வாய் முழுமையாக அமைக்கப்படாததால் கழிவுநீர் வீட்டுப்பகுதிகளின் அருகிலேயே ஓடைபோல் தேங்கியுள்ளது. இப்பகுதியில் தேங்கிய கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இந்தநிலை கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கின்றது. சாக்கடை கால்வாய் அமைக்கப்பெற்று மேல் மூடி அமைத்து சாக்கடை நீர் வெளியே செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

- கிராம மக்கள், கிளிக்கோடி.



தெரு குழாய்களில் தண்ணீர் வருமா?

செங்கல்பட்டு மாவட்டம் மேலமையூர் என்.ஜி.ஜி.ஓ பகுதியில் தெரு குழாய்கள் மூலம் வரும் பாலாறு தண்ணீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த பகுதிக்கு லாரியில் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தெரு குழாய்களில் தண்ணீர் வராத கரணத்தால் மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே மீண்டும் தெரு குழாய்களில் பாலாறு தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

- பொதுமக்கள்.

குளம் போல் தேங்கிய கழிவுநீர்

திருவள்ளூர் மாவட்டம் போரூர் ஸ்ரீரங்கா நகர் சரஸ்வதி தெருவில் இருக்கும் பஞ்சாயத்து ஆபீஸ் பின்புறம் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் நிலை இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீரை அகற்றி நிரந்த தீர்வு தர வேண்டும்.

- ராஜா, சரஸ்வதி தெரு.




Next Story