திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 486 பேர் இன்று பதவிஏற்பு
திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 486 வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்கின்றனர்.
திண்டுக்கல்:
486 வார்டுகள்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் இருக்கின்றன.
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள், பழனியில் 33 வார்டுகள், ஒட்டன்சத்திரத்தில் 18 வார்டுகள், கொடைக்கானலில் 24 வார்டுகள் உள்ளன. மேலும் 23 பேரூராட்சிகளில் 363 வார்டுகள் என மொத்தம் 486 வார்டுகள் இருக்கின்றன. இந்த 486 வார்டுகளின் கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
பதவி ஏற்பு
அதில் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 2 பேரும், 5 பேரூராட்சிகளில் 6 பேரும் என மொத்தம் 8 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 478 பதவிகளுக்கு 2 ஆயிரத்து 61 பேர் போட்டியிட்டனர்.
இதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் 11 இடங்களில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் வெற்றிபெற்ற 486 கவுன்சிலர்களும் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்க உள்ளனர்.
இதையொட்டி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் பதவி ஏற்புவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளின் கவுன்சிலர்களும் இன்று பதவி ஏற்க உள்ளனர். இதற்காக விழா மேடை, பந்தல் அமைக்கப்பட்டு இருக்கிறது.
தலைவர், துணை தலைவர் தேர்வு
இதைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல் மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகளையும் தி.மு.க. ஒட்டுமொத்தமாக கைப்பற்றி இருக்கிறது.
இதனால் மேயர், துணை மேயர், தலைவர், துணை தலைவர் பதவிகளை பிடிக்க தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
Related Tags :
Next Story