தேனி மாவட்டத்தில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவ-மாணவிகள் மீட்பு


தேனி மாவட்டத்தில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவ-மாணவிகள் மீட்பு
x
தினத்தந்தி 1 March 2022 8:21 PM IST (Updated: 1 March 2022 8:21 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவ-மாணவிகள் மீட்கப்பட்டு, அவர்களின் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேனி:
தேனி மாவட்டத்தில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவ-மாணவிகள் மீட்கப்பட்டு, அவர்களின் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா கால இடைநிறுத்தம்
தமிழக கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் இடைநின்ற மாணவ-மாணவிகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 2 கல்வி ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் முழுமையாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது. பல மாதங்கள் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல், ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கி மீண்டும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ-மாணவிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. தேர்ச்சி பெற்ற போதிலும் மாணவ-மாணவிகள் பலர் பள்ளிக்கு வரவில்லை.
கல்வியை தொடர...
இதையடுத்து 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ-மாணவிகளை கண்டறியும் பணியில் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஈடுபட்டனர். இதில் கடந்த காலங்களை விட அதிக அளவில் மாணவ-மாணவிகள் இடைநிறுத்தம் ஏற்பட்டதாக தெரியவந்தது.
அவ்வாறு இடைநின்ற மாணவ-மாணவிகள் இருப்பிடங்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர்கள் தேடிச் சென்று அவர்களின் கல்வியை மீண்டும் தொடர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு மேல்படிப்பு படிக்காமல் இருந்த மாணவ-மாணவிகளும் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் விருப்பத்தின் பேரில் பிளஸ்-1 மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. போன்ற படிப்புகளில் சேர்க்கப்பட்டனர்.
2,129 பேர் மீட்பு
அந்த வகையில் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டு, அவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட்டாரம் வாரியாக, ஆண்டிப்பட்டியில் 248 பேர், போடியில் 253 பேர், சின்னமனூரில் 172 பேர், கம்பத்தில் 375 பேர், கடமலை-மயிலையில் 71 பேர், பெரியகுளத்தில் 273 பேர், தேனியில் 433 பேர், உத்தமபாளையத்தில் 304 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இடைநின்ற மாணவ-மாணவிகளை கண்டறியும் பணிகள் நடந்து வருகிறது. இதனால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story