மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி:
மகா சிவராத்திரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நேற்று மகா சிவராத்தியையொட்டி, காலை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மாலை முளைப்பாரி எடுத்தல், யாகசாலை பிரவேசம், அக்னிமுகம், மகா கணபதி ஹோமம், பரிவார பூஜை நடந்தது. மேலும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபட்டனர். கிருஷ்ணகிரி பழையபேட்டை கவீஸ்வரர் கோவிலில், மாலை 6 மணிக்கு சிறப்பு யாகத்துடன் பூஜைகள் நடந்தன. காவேரிப்பட்டணம் பூங்காவனத்தம்மன் கோவில், பன்னீர் செல்வம் தெரு அங்காளம்மன் கோவில், திம்மாபுரம் அங்காளம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
சந்திர சூடேஸ்வரர் கோவில்
ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சாமிக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி சந்திரசூடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள காசிவிசுவநாதர், நெசவுத்தெருவில் உள்ள சோமேஸ்வரர், ஜனப்பர் தெரு அருகே உள்ள நஞ்சுண்டேஸ்வரர், பசுபதீஸ்வரர் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
சிவநஞ்சுண்டேஸ்வரா கோவில்
கெலமங்கலத்தை அடுத்த பேவநத்தம் கிராமத்தின் அருகே மலை மீது உள்ள சிவநஞ்சுண்டேஸ்வரா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக சாமிக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சாமி தரிசனம் செய்ய ராயக்கோட்டை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
கோவில் அமைந்துள்ள பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அங்கு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story