ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 March 2022 11:01 PM IST (Updated: 1 March 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

செண்பகராயநல்லூர் -மருதூர் இணைப்பு சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கக்கோரி கரியாப்பட்டினத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

வேதாரண்யம்:
செண்பகராயநல்லூர் -மருதூர் இணைப்பு சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கக்கோரி கரியாப்பட்டினத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகல ரெயில் பாதை பணி
 வேதாரண்யம் -திருத்துறைப்பூண்டி வரை புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் செண்பகராயநல்லூர் சனிசந்தை  மருதூர் இணைப்பு சாலை உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அந்த பாதை வழியாக சென்று வருகின்றனர். மேலும் இறந்தவர்களின் உடலை அவ்வழியாக தான் மயானத்திற்கு எடுத்து செல்லவேண்டியுள்ளது.
 ஆர்ப்பாட்டம்
பொதுமக்களின் நலன் கருதி செண்பகராயநல்லூர்-மருதூர் இணைப்பு சாலையில் அகல ரெயில்பாதை அமைக்கும் போது சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் ரெயில்வே நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இவரை ரெயில்வேதுறை சுரங்கபாதை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை என கூறி நேற்று கரியாப்பட்டினத்தில்  ஒன்றிய கவுன்சிலர் உஷாராணி தலைமையில், அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த கரியாப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரெயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கபடும் என போலீசார் உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story