சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர்
மகாசிவராத்திரி
மகாசிவராத்திரி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கரூரில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு இரவு 8 மணிக்கு விநாயகர் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு பசுபதீஸ்வரருக்கு பால், பன்னீர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, முதல்கால சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு 2-ம் கால சிறப்பு பூஜையும், 2 மணிக்கு 3-ம் கால சிறப்பு பூஜையும், அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால சிறப்பு பூஜையும் நடைபெற்றது. மேலும் நள்ளிரவு 1 மணியளவில் 108 தாமரைமலர்களால் நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது.
சிறப்பு பூஜைகள்
மேலும் சவுந்திரநாயகி உடனாகிய நாகேஸ்வரர் பெருமான் மற்றும் காந்திமதிஅம்மை உடனாகிய கரியமாலீஸ்வரர் பெருமானுக்கு 16 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மகா சிவராத்திரியை முன்னிட்டு கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து பசுபதீஸ்வரரை தரிசனம் செய்தனர். அப்போது மனமுருகி சாமியை வழிபட்டனர். மேலும் சிவராத்திரி நாளில் கண்விழித்து சிவனை தரிசித்தால் மங்கல வாழ்வு உண்டாகும் என ஐதீகம் உள்ளதால் பக்தர்கள் பலர் இரவு வரை கோவிலில் இருந்தனர்.
பரதநாட்டிய நிகழ்ச்சி
மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து பரதநாட்டியம், வீணை இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை பக்தர்கள் கண்டுகளித்தனர். இதேபோல் கரூர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள கோடீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு மாலை 4 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் மற்றும் யாகப்பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அரவக்குறிச்சி, தோகைமலை
இதேபோல் சிவராத்திரி விழாவையொட்டி அரவக்குறிச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் உடனமர் காசி விசாலாட்சி கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. அதை முன்னிட்டு காசி விஸ்வநாதர் உடனமர் காசி விசாலாட்சிக்கு நான்கு கால சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு பூஜையை கோவில் அர்ச்சகர்கள் செய்தனர். சிறப்பு பூஜையில் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்.டி.மலை மலை மீது அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இந்த விழாவில் கோவில் அர்ச்சகர்கள் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதேபோல் தோகைமலை கடை வீதியில் அமைந்துள்ள மூங்கிலணை காமாட்சி கோவில், தோகைமலை மலை மீது அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், கழுகூர் ஊராட்சிக்கு உட்பட்ட கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், தோகைமலை மார்க்கண்டேயன் கோவில், சின்னாளப்பட்டி அவூடைலிங்கேஸ்வரர் கோவில், சிவாயம் சிவபுரி ஈஸ்வரர் கோவில், இடையப்பட்டி ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்பட தோகைமலை சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று இரவு மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி இரவு 7 அளவில் முதல் கால பூஜைகள் தொடங்கியது. இதில் சிவலிங்கத்திற்கு புனிதநீரால் நீராடப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 11 மணி அளவில் 2-ம் கால பூஜையில் மல்லிகை, அரளி, முல்லை, செண்பகம் மற்றும் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. 3-ம் காலபூஜை 2 மணி அளவில் பல்வேறு தீபங்கள் ஏற்றப்பட்டு மகா தீபாராதனை வழிபாடுகள் நடந்தது. இதனை தொடர்ந்து 4-ம் கால பூஜையில் சிவபெருமானுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. 4 கால பூஜைகளில் பக்தர்கள் கலந்துக்கொண்டு இரவு முழுவதும் கோவிலில் தங்கி சாமி தரிசனம் செய்தனர்
இதேபோல் காகிதபுரம் காசிவிஸ்வநாதன்கோவில், தோட்டக்குறிச்சி சொக்கநாதர்கோவில், மண்மங்கலம் மணிகண்டேஸ்வரர் கோவிலும் சிவராத்திரியையொட்டி நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story