டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி டிரைவர் பலி
டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி டிரைவர் பலியானார்.
வெள்ளியணை
ஈரோடு மாவட்டம் காகம் எல்லகடை பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 37). இவர் சொந்தமாக சரக்குகளை ஏற்றி செல்லும் வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருடைய சரக்கு வேனில் அதே பகுதி வடுகபட்டி பண்ணைகிணறு காலனியை சேர்ந்த ஜெகதீசன் (23) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடராஜ் மற்றும் ஜெகதீசன் இருவரும் சரக்கு வேனில் தஞ்சாவூரிலிருந்து வைக்கோல் ஏற்றி கொண்டு கரூர் வழியாக ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது இரவு சுமார் 12 மணி அளவில் தூக்கம் வந்ததன் காரணமாக சரக்கு வேனை திருச்சி-கரூர் பைபாஸ் சலையில் கரூர் அருகே ஏமூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் நிறுத்திவிட்டு, ஏற்கனவே அங்கு நின்றுகொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரியின் முன்பு ஜெகதீசன் படுத்து தூங்கி விட்டார். பெட்ரோல் டேங்கர் லாரியின் டிரைவரும் தூக்கம் வந்ததன் காரணமாக மேற்படி பெட்ரோல் பங்கில் நிறுத்தி தூங்கிவிட்டார். பின் டேங்கர் லாரியின் டிரைவர் அதிகாலையில் தூக்கம் கலைந்து எழுந்து டேங்கர் லாரியை இயக்க முற்பட்டபோது வண்டியின் முன் தூங்கிக்கொண்டிருந்த சரக்கு வேனின் டிரைவர் ஜெகதீசன் மேல் டேங்கர் லாரியின் சக்கரம் ஏறி இறங்கி உள்ளது. இதனால் ஜெகதீசன் உடல் நசுங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த சரக்கு வேனின் உரிமையாளர் நடராஜ் அங்கிருந்தவர்களின் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு ஜெகதீசனை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வெள்ளியணை போலீசார் டேங்கர் லாரியின் டிரைவர் கடலூர் மாவட்டம் நாணமேடு பகுதியை சேர்ந்த குணசேகரன்(37) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story