ரூ.20 லட்சம் கடல் அட்டைகள், சுறா மீன் இறக்கைகள் பறிமுதல்
வெளிநாடுகளுக்கு கடத்தி செல்வதற்காக நாகையில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள், சுறா மீன் இறக்கைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
வெளிநாடுகளுக்கு கடத்தி செல்வதற்காக நாகையில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள், சுறா மீன் இறக்கைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.
வெளிநாடுகளுக்கு கடத்தல்
கடல்வாழ் உயிரினங்களில் அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடல் அட்டை உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உணவுக்காகவும், பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிப்பதற்காகவும் கடல் அட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.
தமிழக கடலோர பகுதியில் இருந்து சட்ட விரோதமாக கடல் அட்டைகள் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதனால் கடல் அட்டைகள் கடத்தப்படுவதை தடுக்க நாகை மாவட்டத்தில் வனத்துறையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரகசிய தகவல்
இந்த நிலையில் நாகையில் இருந்து கடல் அட்டைகள், சுறா மீன் இறக்கைகள், கடல் குதிரைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக நாகை கடலோர காவல் குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார், நாகை அக்கரைப்பேட்டை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து நாகை அக்கரைபேட்டை மாரியம்மன் கோவிலுக்கு தென்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் ஒரு பழைய கட்டிடத்தில் போலீசார் சோதனை செய்தனர்.
ரூ.20 லட்சம் கடல் அட்டை, சுறா மீன் இறக்கைகள் பறிமுதல்
அப்போது அந்த கட்டிடத்தில் 812 கிலோ கடல் அட்டைகள், 248 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள், 15 கிலோ பதப்படுத்தப்பட்ட சுறா மீன் இறக்கைகள், 4 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் குதிரைகள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இவற்றை பதப்படுத்த பயன்படுத்தப்படும் அடுப்பு, 2 சிலிண்டர்கள், தராசு உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தையும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.
வலைவீச்சு
இது குறித்து கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நாகை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம்(வயது 51) என்பவர் கடல் அட்டை மற்றும் சுறா மீன்களின் இறக்கை, கடல் குதிரைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
தப்பி ஓடிய முருகானந்தத்தை போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர். பறிமுதல் செய்த கடல் அட்டை உள்ளிட்டவற்றை நாகை வனச்சரக அலுவலகத்தில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story