நேரத்தை வீணாக்காமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்; கலெக்டர் அறிவுரை


நேரத்தை வீணாக்காமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்; கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 2 March 2022 12:20 AM IST (Updated: 2 March 2022 12:20 AM IST)
t-max-icont-min-icon

பொதுத்தேர்வுக்கு இருக்கக்கூடிய இடைப்பட்ட காலத்தில் தொலைபேசி செயலிகளை உபயோகித்து நேரத்தை வீணாக்குவதை தவிர்த்து பாடத்திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்திட வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ் அறிவுரை வழங்கி பேசினார்.

திருவண்ணாமலை

பொதுத்தேர்வுக்கு இருக்கக்கூடிய இடைப்பட்ட காலத்தில் தொலைபேசி செயலிகளை உபயோகித்து நேரத்தை வீணாக்குவதை தவிர்த்து பாடத்திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்திட வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ் அறிவுரை வழங்கி பேசினார்.

பள்ளி மாணவிகளுடன் கலெக்டர்

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக முதல்- அமைச்சரால் ‘நான் முதல்வன் உலகை வெல்லும் இளைய தமிழகம்’ என்ற பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி திட்டத்தினை தொடங்கி வைத்த நிகழ்ச்சி திருவண்ணாமலை நகராட்சி மகளிர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் முருகேஷ் பள்ளி மாணவிகளுடன் பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:- 

தமிழக முதல்- அமைச்சர் ‘நான் முதல்வன், உலகை வெல்லும் இளைய தமிழகம்’ என்ற திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். 

இந்த திட்டத்தின் நோக்கம் பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது எதிர்காலத்தில் தாங்கள் அடைய வேண்டிய லட்சியம் குறித்து முன்னதாகவே திட்டமிட்டு, அதற்கு உகந்த பயிற்சி வகுப்புகளை பெற்று தங்களுடைய லட்சியத்தை எய்தி தாங்கள் எடுத்துக்கொண்ட துறைகளில் முதன்மையானவர்களாக திகழ வேண்டும். 

மேலும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தொழில் நுட்பம் சார்ந்த கல்விகளை வழங்கிடவும், தமிழக மாணவ-மாணவிகள் எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் உலக அளவில் முதன்மை மிக்கவர்களாக உருவாக வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

பள்ளி மாணவர்களாகிய நீங்கள் இன்னும் சில நாட்களில் பொதுத்தேர்வினை எதிர்கொள்ள உள்ளீர்கள். பொது தேர்வுக்கு இருக்கக்கூடிய இந்த இடைப்பட்ட காலத்தில் தொலைபேசி செயலிகளை உபயோகித்து நேரத்தை வீணாக்குவது மற்றும் குடும்ப பொருளாதார சூழ்நிலையை எண்ணி கவலை கொள்வது போன்றவற்றை தவிர்த்து தங்களுடைய பாடத்திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்திட வேண்டும்.

பொன்னான காலமாக கருதி...

பொதுத்தேர்வுக்கு இருக்கக்கூடிய இந்த இடைப்பட்ட காலத்தினை தங்களது எதிர்காலத்தினை தீர்மானிக்கும் பொன்னான காலமாக கருதி கல்வியில் முழு கவனம் செலுத்தி எதிர்வரும் பொதுத்தேர்வினை நீங்கள் அனைவரும் வெற்றிகரமாக எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.

மாணவ, மாணவிகள் அனைவருக்குள்ளும் சமமான திறமைகள் ஒளிந்திருக்கும். எனவே ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை விடுத்து தங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் அரசினால் வழங்கப்படும் உள்வளர் திறன் பயிற்சிகளை பயன்படுத்தி தங்களது திறமைகளை நன்கு வளர்த்து கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் தாங்கள் தேர்ந்தெடுக்ககூடிய துறைகளில் நீங்கள் அனைவரும் முதன்மை மிக்கவர்களாக திகழ வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆரோகியசாமி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் வெங்கட்ராமன், தேவஆசிர்வாதம், பள்ளி துணை ஆய்வாளர் குமார், பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி, பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Next Story