விசைப்படகுகளில் இரட்டை மடி வலை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்-நாட்டுப்படகு மீனவர்கள் கலெக்டரிடம் மனு
விசைப்படகுகளில் இரட்டை மடி வலை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என நாட்டுப்படகு மீனவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை,
நாட்டுப்படகு மீனவர்கள்
புதுக்கோட்டை மாவட்ட பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் நலச்சங்கத்தினர் மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் குமரன் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்து கலெக்டர் கவிதாராமுவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 28 மீனவ கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சிறிய பைபர் படகுகள் மூலம் கரையோரம் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம்.
இரட்டை மடி வலை
கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகுகள் உள்ளன. இதில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த சில விசைப்படகுகள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தியும், கடலில் 5 மைலுக்கு உள்ளே கரையோரம் வலை இழுத்து கடல் வளத்தை அழித்தும், நாட்டுப்படகு மீனவர்களின் வலையையும் சேதப்படுத்தியும் வருகின்றனர்.
இது தொடர்பாக மீன்வளத்துறை, வருவாய்த்துறை, போலீஸ் துறைகளில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத்தினர் கூட்டத்தில் இது தொடர்பாக மாபெரும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கலெக்டரிடம் மனு அளிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் நாட்டுப்படகு வாழ்வாதார நலன் கருதி தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலை கரையோரம் கரைமடி இழுக்கும் விசைப்படகுகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோல் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story