மயானக்கொள்ளை திருவிழாவில் 500 போலீசார் பாதுகாப்பு இசைக்கச்சேரி நடத்த தடை
வேலூர் மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழாவில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இசைக்கச்சேரி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழாவில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இசைக்கச்சேரி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
போலீசார் பாதுகாப்பு
வேலூர் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) மயானக்கொள்ளை திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
அசம்பாவித சம்பவங்களை தடுக்க காவல்துறையும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், பொதுமக்களின் வருகையின் அடிப்படையில் பாதுகாப்பு பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
டிரோன் மூலம் விழா நடைபெறும் இடத்தை கண்காணிக்கவும், ஆயுதங்கள் கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் நபர்களை கைது செய்யவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழா நடக்கும் இடங்கள் மற்றும் ஊர்வலம் செல்லும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட உள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 14 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுகிறது.
இசைக்கச்சேரி
ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் பொதுஇடங்களில் இசை கச்சேரி நடத்தவும், அன்னதானம் செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட உள்ளது. பிற மதத்தினரின் வழிபாட்டு தலங்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், பட்டாசு, வெடி பொருட்களை வெடிக்கூடாது என்றும் விழாக்குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர் செல்லும் வழிகளில் உள்ள உயர் மற்றும் தாழ்வழுத்த மின் வழித்தடங்களில் மின் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
விழா முடிந்தபின்னர் 48 மணி நேரத்துக்குள் குப்பைகளை அகற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
ஆலோசனை கூட்டம்
வேலூர், காட்பாடியில் இருந்து சுமார் 12 தேர்கள் பாலாற்றங்கரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதையொட்டி வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி தலைமையில் நேற்று மயானக்கொள்ளை விழாக்குழுவினருடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் விழாக்குழுவினருக்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. பாலாற்றங்கரைக்கு தேர்கள் கொண்டுவரும்போது ஏராளமான பொதுமக்கள் வருகை தர உள்ளதால் காட்பாடி-வேலூர் பாலாற்று பாலம் இருவழிப்பாதையாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்து மாற்றம்
வேலூரில் மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு இன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் முதல் காட்பாடி வரை செல்லும் அனைத்து வாகனங்களும் காலை 11 மணி வரை கிரீன்சர்க்கிள், முத்துமண்டபம், புதிய பாலாற்று பாலம் வழியாக மாற்றம் ஏதுமின்றி அனுமதிக்கப்படுகிறது. காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள், பஸ்கள், கிரீன்சர்க்கிள், செல்லியம்மன் கோவில், பழைய பாலாற்று பாலம் வழியாக காட்பாடி செல்ல வேண்டும்.
பெங்களூரு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய நகரங்களில் இருந்து வேலூர் நோக்கி வரும் அனைத்து பஸ்களும், கொணவட்டம், டி.வி.எஸ்.கம்பெனி, ஆடுதொட்டி, கிரீன்சர்க்கிள் வழியாக புதிய பஸ் நிலையம் செல்ல வேண்டும்.
பெங்களூரு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய நகரில் இருந்து வேலூர் வழியாக சித்தூர் நோக்கி செல்லும் வாகனங்கள் வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, திருவலம், சேர்க்காடு வழியாக சித்தூர் செல்ல வேண்டும். சித்தூரில் இருந்து வேலூர் நோக்கி வரும் அனைத்து கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் சித்தூர் பஸ் நிலையம், வி.ஐ.டி., . இ.பி.கூட்ரோடு, திருவலம், ராணிப்பேட்டை, ஆற்காடு வழியாக செல்ல வேண்டும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story