துணை மின்நிலையத்தில் தீ விபத்து


துணை மின்நிலையத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 2 March 2022 12:45 AM IST (Updated: 2 March 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

பணகுடி அருகே துணை மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

வடக்கன்குளம்:

பணகுடி அருகே புதியம்புத்தூரில் பெருங்குடி துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு செயலிழந்த டிரான்ஸ்பார்மர் மாற்றப்பட்டு துணைமின் நிலைய வளாகத்திலேயே வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு அதனை அகற்றும்போது எதிர்பாராதவிதமாக செயலிழந்த டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி பழைய டிரான்ஸ்பார்மரில் இருந்த ஆயில் மற்றும் காப்பர் எரிய தொடங்கின. 

இதனால் அங்கிருந்த அதிகாரிகள் உடனடியாக துணை மின் நிலையத்திற்கு வரும் மின் இணைப்பையும், அங்கிருந்து வெளியே செல்லும் மின் இணைப்பையும் துண்டித்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் வள்ளியூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு துறையினர் அங்கு வந்து தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் தீ மளமளவென வேகமாக பரவி சுமார் நான்கு மணி நேரம் எரிந்து கொண்டே இருந்தது. பின்பு அந்த பகுதியில் இருந்த மக்கள் லாரி மூலம் மணலைக் கொண்டு வந்து அங்கு கொட்டினர். பின்பு அந்த மணலை பொக்லைன் எந்திரம் மூலம் எரிந்து கொண்டிருந்த டிரான்ஸ்பார்மர் மீது அள்ளிப்போட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த தீ விபத்தினால் குமாரபுரம், ஆவரைகுளம், புதியம்புத்தூர், சிதம்பராபுரம், யாக்கோபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 5 மணி நேரம் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது.

Next Story