குருமலை மலைகிராமத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியை மீண்டும் தொடங்குவது குறித்து திட்ட இயக்குனர்ஆய்வு


குருமலை மலைகிராமத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட  சாலை பணியை மீண்டும் தொடங்குவது குறித்து திட்ட இயக்குனர்ஆய்வு
x
தினத்தந்தி 2 March 2022 12:45 AM IST (Updated: 2 March 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

குருமலை மலைகிராமத்திற்கு அமைக்கப்பட்ட சாலை பாதியில்நிறுத்தப்பட்டது. அந்த பணியை மீண்டும் தொடங்குவது குறித்து திட்ட இயக்குனர் ஆய்வுசெய்தார்.

அடுக்கம்பாறை

குருமலை மலைகிராமத்திற்கு அமைக்கப்பட்ட சாலை பாதியில்நிறுத்தப்பட்டது. அந்த பணியை மீண்டும் தொடங்குவது குறித்து திட்ட இயக்குனர் ஆய்வுசெய்தார்.

மலை கிராமங்கள்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட ஊசூர் அருகே குருமலை என்ற மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி வெள்ளைக்கல் மலை, பள்ளக்கொல்லை மற்றும் நச்சிமேடு ஆகிய மலை குக்கிராமங்களும் உள்ளது. இந்த 4 மலை ராமங்களிலும் 400-–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் ஊசூர், அத்தியூர், அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கூலி வேலை செய்கின்றனர். 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் இந்த மலைவாழ் மக்களுக்கு இதுவரை சாலை வசதி அமைத்து தரவில்லை. 

குருமலையில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் 8-–ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்புக்கு ஊசூர் மற்றும் அணைக்கட்டு பகுதிக்குதான் வரவேண்டும். இதனால் அவர்கள் தங்கள் மேற்படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சிரமத்தை குறைக்கும் வகையில் குருமலை பகுதிக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என மலை கிராம மக்கள் தலைமுறை, தலைமுறையாக கோரிக்கை வைத்து வருகின்றனர். 

திட்ட இயக்குனர் ஆய்வு

அதன்பேரில் கடந்த 2018-2019-ம் நிதி ஆண்டில் ரூ.1.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக ஜல்லி நிரப்பும் பணி முடிந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் சாலையில் ஏற்பட்ட அரிப்பு உள்ளிட்ட பல்வேறு தடைகள் காரணமாக சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நின்றுவிட்டது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மலை கிராமத்தில் ஆய்வு செய்தனர். அப்போது சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட் ரமேஷ் பாபு, ராஜன்பாபு, ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் ஜெய்சங்கர், ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

அப்போது சாலை பணியை மீண்டும் தொடங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மலைகிராமங்களில் நடைபெற்று வரும் வீடு கட்டும் பணி, பண்ணை குட்டை அமைக்கும் பணி உள்ளிட்டவைகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Next Story