மயிலாடுதுறை வாலிபருக்கு வலைவீச்சு


மயிலாடுதுறை வாலிபருக்கு வலைவீச்சு
x

முகநூலில் பெண்ணின் ஆபாச படத்தை பதிவிட்ட மயிலாடுதுறை வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மயிலாடுதுறை:
முகநூலில் பெண்ணின் ஆபாச படத்தை பதிவிட்ட மயிலாடுதுறை வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மிரட்டி பணம் பறிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் எம்.சி.பள்ளி அருகில் வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் மனைவி ரம்மாளு (வயது 34). மயிலாடுதுறை அருகே கீழமருதாநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் சரத்குமார் (28). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இந்தநிலையில் ரம்மாளுவின் ஆபாச படத்தை முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி சரத்குமார் பணம் கேட்டுள்ளார். இதனால் பயந்து போன ரம்மாளு ரூ.70 ஆயிரத்தை சரத்குமார் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். மேலும் ரூ.5 ஆயிரம் அனுப்பியுள்ளார். அதைத்தொடர்ந்து மேலும் சரத்குமார் பணம் கேட்டுள்ளார். ஆனால் ரம்மாளு பணம் தர மறுத்துள்ளார். 
இந்தநிலையில் ரம்மாளுவின் ஆபாச படங்களை முகநூலில் சரத்குமார் பதிவிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்மாளு, தமிழக முதல்-அமைச்சரின் தனிப் பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளார். இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் மனு வந்துள்ளது. 
வலைவீச்சு
இந்த மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மயிலாடுதுறை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவிட்டார். அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், வெங்கடேசன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரம்மாளுவை மிரட்டி சரத்குமார் பணம் கேட்டதும், அதனைத்தொடர்ந்து முகநூலில் ரம்மாளுவின் ஆபாச படங்களை முகநூலில் பதிவிட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து ரம்மாளுவை மிரட்டி பணம் பறித்ததோடு, பெண்ணின் ஆபாச படத்தை முகநூலில் பதிவிட்டு அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக சரத்குமார் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக சரத்குமாரை மயிலாடுதுறை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story