உக்ரைனில் சிக்கி தவிக்கும் நெல்லை மாணவர்களை உடனே மீட்க வேண்டும்
உக்ரைனில் சிக்கி தவிக்கும் நெல்லை மாணவர்களை மீட்டுத்தர வேண்டும் என்று அவர்களது பெற்றோர்கள் கலெக்டரிடம் கண்ணீர்மல்க கோரிக்கை மனு கொடுத்தனர்.
நெல்லை:
உக்ரைனில் சிக்கி தவிக்கும் நெல்லை மாணவர்களை மீட்டுத்தர வேண்டும் என்று அவர்களது பெற்றோர்கள் கலெக்டரிடம் கண்ணீர்மல்க கோரிக்கை மனு கொடுத்தனர்.
மாணவர்கள் தவிப்பு
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. அங்குள்ள முக்கிய நகரங்களில் குண்டுகள் வீசப்படுவதால் கடும் பதற்றம் நிலவுகிறது. தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்கள். அங்கு சிக்கி தவிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை தனி விமானம் மூலம் தாயகத்துக்கு அழைத்து வரும் பணி நடந்து வருகிறது. ஆனாலும், இன்னும் ஏராளமான மாணவர்கள் அங்கு சிக்கி தவிக்கின்றனர்.
இந்த நிலையில் உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வரும் நெல்லை வண்ணார்பேட்டை பரணிநகரை சேர்ந்த தீபஸ்ரீ, ஜோதிபுரத்தை சேர்ந்த மனோஜ் ஜெபத்துரை ஆகியோரும் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருவது தெரியவந்து உள்ளது.
கலெக்டரிடம் மனு
இந்த நிலையில் தீபஸ்ரீயின் பெற்றோர் மணிகண்டன்- சிவசங்கரி, மனோஜ் ஜெபத்துரையின் தாய் அமுதா மற்றும் உறவினர்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தங்களது பிள்ளைகளை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் விஷ்ணுவிடம் கண்ணீ்ர்மல்க மனு அளித்தனர்.
அந்த மனுவில், நெல்லையை சேர்ந்த மாணவ-மாணவிகள் உக்ரைனில் மருத்துவ படிப்புக்காக சென்று தற்போதைய போர் சூழலில் அங்கு சிக்கி தவிக்கின்றனர். எங்களது பிள்ளைகள் உணவு, குடிநீர் வசதியின்றி கடுமையாக சிரமப்படுகிறார்கள். எனவே அவர்களை உடனே மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story