ஆன்லைன் மோசடி; ரூ.3¼ லட்சம் மீட்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களின் ரூ.3¼ லட்சம் மீட்கப்பட்டு உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களின் ரூ.3¼ லட்சம் மீட்கப்பட்டு உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பண மோசடிகள்
ராமநாதபுரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடன் தருவதாகவும், பரிசு விழுந்திருப்பதாகவும், குறைந்த விலையில் பொருட்கள் தருவதாகவும், வங்கி கணக்கின் சுய விவரங்களை சரிபார்க்கும் லிங்க் மூலமாகவும், தெரிந்தவர், உயர் அதிகாரிகள் தரப்பில் இருந்து பணம் கேட்டு வரும் குறுந்தகவல் வழியாகவும், டவர் அமைக்க இடம் தேவைப்படுவதாகவும், ஏ.டி.எம். கார்டு புதுப்பிக்க அழைத்துள்ளதாகவும் இவ்வாறு பல வழிகளில் ஆன்லைன் பண மோசடிகள் நடைபெற்று வருகின்றன.
காவல்துறை சார்பில் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் ஆசையை தூண்டி அவர்களை வலையில் சிக்க வைத்து மோசடி கும்பல் தங்களின் திட்டத்தினை சர்வ சாதாரணமாக நிறைவேற்றி ஏமாற்றி வருகின்றனர்.
நாள்தோறும் ஒவ்வொரு வகையில் புதுப்புது டெக்னிக்கை பயன்படுத்தி பண மோசடி செய்து வருகின்றனர். இதுபோன்ற மோசடியில் சிக்கி பணத்தினை இழந்தால் மக்கள் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு 24 மணி நேரத்திற்குள் தகவல் தெரிவித்தால் பணத்தினை மீட்க உதவியாக இருக்கும். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
ரூ.3¼ லட்சம் மீட்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் சைபர்கிரைம் பிரிவின் சார்பில் கடந்த ஆண்டு 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 35 வழக்குகளில் 6 வழக்குகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுவாக இதுபோன்ற மோசடி சம்பவங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றால் எளிதில் கைது செய்து பணத்தினை மீட்க முடியும். ஆனால், இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் போலி முகவரி உள்ளிட்டவைகளால் அவர்களை கைது செய்வதில் சிக்கல் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 14 ஆயிரத்து 83 மதிப்பிலான மோசடிகள் நடந்துள்ளதில் 4.81 சதவீத பணம் மீட்கப்பட்டுள்ளது. மோசடி தொடர்பாக ரூ.6 லட்சத்து 45 ஆயிரத்து 258 வங்கி கணக்கில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.3 லட்சத்து 38 ஆயிரத்து 126 உரியவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இது 52 சதவீதம் ஆகும்.
பொதுமக்கள் விழிப்புடன் இருந்து கொண்டாலே இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் உடனிருந்தார்.
Related Tags :
Next Story