நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 210 பேர் இன்று பதவியேற்பு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 210 பேர் இன்று பதவியேற்பு
x
தினத்தந்தி 2 March 2022 1:09 AM IST (Updated: 2 March 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 210 பேர் இன்று பதவியேற்க உள்ளனர்.

விழுப்புரம்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதியன்று நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளுக்கான தேர்தலில் மொத்தமுள்ள 210 கவுன்சிலர் பதவியிடங்களில் விக்கிரவாண்டி பேரூராட்சியில் ஒருவரும், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் ஒருவரும் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளின் 102 நகரமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 7 பேரூராட்சிகளின் 106 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடந்தது. 

210 பேர் இன்று பதவி ஏற்பு

அதனை தொடர்ந்து 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 210 இடங்களில் தி.மு.க. 130 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை தக்க வைத்துக்கொண்டது. அதேபோல் அ.தி.மு.க. 33 இடங்களிலும், பா.ம.க. 6  இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும், தே.மு.தி.க. ஒரு இடத்திலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு இடத்தையும் கைப்பற்றின. இதுதவிர சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் 31 பேர் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 210 கவுன்சிலர்களும் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்க உள்ளனர். இதற்காக மாவட்டத்தில் உள்ள அந்தந்த நகராட்சி, பேரூராட்சிகளில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் 42 நகரமன்ற வார்டு கவுன்சிலர்களும், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் 33 வார்டு கவுன்சிலர்களும், கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் 27 வார்டு கவுன்சிலர்களும், அனந்தபுரம் பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர்களும், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் 12 வார்டு கவுன்சிலர்களும், செஞ்சி பேரூராட்சியில் 18 வார்டு கவுன்சிலர்களும், மரக்காணம் பேரூராட்சியில் 18 வார்டு கவுன்சிலர்களும், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர்களும், வளவனூர் பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர்களும், விக்கிரவாண்டி பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர்களும் பதவி ஏற்கிறார்கள். 

இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலையில்  நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர் பதவிக்கான தேர்தலும், பிற்பகலில் துணைத்தலைவருக்கான தேர்தலும் நடைபெறுகிறது.

Next Story