சிவகாசி மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூண்டோடு தி.மு.க.வில் இணைந்தனர்


சிவகாசி மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூண்டோடு தி.மு.க.வில் இணைந்தனர்
x
தினத்தந்தி 2 March 2022 1:12 AM IST (Updated: 2 March 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 11 அ.தி.மு.க. கவுன்சிலர்களில் 9 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகாசி, 
சிவகாசி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 11 அ.தி.மு.க. கவுன்சிலர்களில் 9 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகாசி மாநகராட்சி தேர்தல்
மாநகராட்சியாக தரம் உயர்ந்த பின்பு, சிவகாசி மாநகராட்சிக்கு கடந்த மாதம் 19-ந் தேதி தேர்தல் நடந்தது. 
48 வார்டுகளை கொண்ட சிவகாசி மாநகராட்சியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 24 பேர் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க.வினர் 11 வார்டுகளிலும், காங்கிரஸ் 6 வார்டுகளிலும், சுயேச்சைகள் 4 பேரும், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், பா.ஜனதா ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் தலா 1 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். 
தி.மு.க. கூட்டணி மெஜாரிட்டியுடன் சிவகாசி மாநகராட்சியை கைப்பற்றிய நிலையில், இன்று (புதன்கிழமை) அனைத்து கவுன்சிலர்களும் பதவி ஏற்க மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில், சிவகாசி மாநகராட்சியில் வெற்றி பெற்ற 9 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் அக்கட்சியின் உள்ளூர் முக்கிய நிர்வாகிகள் சிலர், மொத்தமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூர் புறப்பட்டு சென்றனர். இதனால் சிவகாசியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று விட்டு சிவகாசி திரும்ப இருப்பதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த 9 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணையப்போவதாக தகவல் பரவியது.
தி.மு.க.வில் இணைந்தனர்
சிவகாசி மாநகராட்சியின் 1-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வம், 2-வது வார்டு சசிக்குமார், 4-வது வார்டு அழகுமயில் பொன்சக்திவேல், 6-வது வார்டு ஸ்ரீநிகா, 7-வது வார்டு சேதுராமன், 13-வது வார்டு மாரீசுவரி, 14-வது வார்டு சாந்தி சிவநேசன், 17-வது வார்டு நிலானி, 21-வது வார்டு சந்தனமாரி மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், முன்னாள் மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான பலராம், திருத்தங்கல் நகர அ.தி.மு.க. செயலாளரும், திருத்தங்கல் நகராட்சியின் முன்னாள் துணைத்தலைவருமான பொன்சக்திவேல், ரோசல்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும், விருதுநகர் ஒன்றிய மகளிர் அணி இணை செயலாளருமான தமிழரசி ஜெயமுருகன், திருத்தங்கல் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ரமணா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைசெயலாளர் ரவிசெல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சீனிவாசபெருமாள், காரனேசன் கூட்டுறவு சங்க இயக்குனர் மணி மாறன், திருத்தங்கல் நகர துணை செயலாளர் காளி ராஜன், நகர விவசாய அணி தலைவர் கணேசன், விவசாய அணி திருத்தங்கல் நகர செயலாளர் சிவநேசன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.
அமைச்சர்கள் முன்னிலையில்...
சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் அவர்கள் தங்களை தி.மு.க.வில் இணைத்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திருத்தங்கல் நகர தி.மு.க. பொறுப்பாளர் உதயசூரியன், மதர்ஸ் கே.வி.கந்தசாமி, தொழில் அதிபர் லெனின்கிருஷ்ணமூர்த்தி, நா.ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 11 பேரில் 9 பேர் பதவி ஏற்பதற்கு முன்னரே தங்களது கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 10-வது வார்டு சாந்தி சரவணன், 30-வது வார்டு கரை முருகன் ஆகிய 2 கவுன்சிலர்கள் மட்டுமே அ.தி.மு.க.வில் உள்ளனர். சிவகாசி மாநகராட்சியில் அ.தி.மு.க. பலம் 11 கவுன்சிலர்கள் என்று இருந்த நிலையில் அதன் பலம் தற்போது 2-ஆக குறைந்துள்ளது.
அருப்புக்கோட்டை 
அருப்புக்கோட்டை நகர்மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரகுமான் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அதேபோல அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது தி.மு.க. மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் ரமேஷ் உடனிருந்தார்.

Next Story