10 நாட்களாக ஆழ்கடலில் தவிக்கும் குமரி மீனவர்கள்
விசைப்படகின் என்ஜின் பழுதானதால் 10 நாட்களாக ஆழ்கடலில் தவிக்கும் குமரி மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொல்லங்கோடு:
விசைப்படகின் என்ஜின் பழுதானதால் 10 நாட்களாக ஆழ்கடலில் தவிக்கும் குமரி மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மீனவர்கள்
கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த ஜாண் போஸ்கோ. இவருக்கு சொந்தமான சோபனாமோள் என்ற விசைப்படகில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர்கள் கொச்சி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள், கடந்த மாதம் 18-ந்தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆள்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் ஆழ்கடல் பகுதியில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென படகின் என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதனால், படகை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
10 நாட்களாக தவிப்பு
அதைதொடர்ந்து அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் உதவியை நாடினர். ஆனால், இவர்களின் படகு பெரிய விசைப்படகு என்பதால் அதனை இழுத்து கரைக்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து மீனவர்கள் தங்களை மீட்க ஊரில் உள்ள உறவினர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு நேற்று தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதுவரை மீனவர்களை மீட்பதற்க்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. என்ஜின் பழுதானதால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குமரி மீனவர்கள் 11 பேர் படகிலேயே பரிதவித்து வருகின்றனர்.
உறவினர்கள் கோரிக்கை
எனவே, ஆழ்கடலில் படகு என்ஜின் பழுதாக தவிக்கும் மீனவர்களை மீட்க தமிழக அரசும், மீன்வளத்துறை அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.