மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு


மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 2 March 2022 2:13 AM IST (Updated: 2 March 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

பெரம்பலூர்:

மகா சிவராத்திரி
பெரம்பலூர் மாவட்ட பகுதியில் உள்ள சிவன் கோவிலில்களில் மகாசிவராத்திரி விழா 4 கால ருத்ர வேள்விகளுடன் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தொடங்கி 4 காலத்திற்கு நடைபெற்ற பூஜைகளையொட்டி மூலவருக்கு வாசனை திரவியங்கள், பால், இளநீர் உள்ளிட்ட சோடஷ அபிசேக பொருட்களைக்கொண்டு மகா அபிஷேகமும், மகாதீபாராதனையும் நடந்தன.
தினசரி வழிபாட்டு குழுவினர், வார வழிபாட்டுக் குழுவினர் மற்றும் சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு திருக்கடைக்காப்பு, திருப்பாட்டு, தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளையும், சிவபுராணத்தையும் பாராயணம் செய்தனர். 4 காலபூஜைகளிலும் திரளான பக்தர்கள் கலந்து  கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் மணி மற்றும் அர்ச்சகர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
சித்தர்கள் வேள்வி
பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பேரூராட்சியில் உள்ள தர்மசம்வர்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் 4 கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் குரும்பலூர், ஈச்சம்பட்டி, பாளையம், செஞ்சேரி, கீழக்கணவாய், புதூர், மேட்டாங்காடு மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். எளம்பலூரில் பிரம்மரிஷிமலை அடிவாரத்தில் உள்ள நளினாம்பிகை உடனுறை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் நேற்று மாலை கோபூஜை, அஸ்வ பூஜை, ருத்ரபூஜையுடன் விழா தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ரோகிணிமாதாஜி தலைமை தாங்கினார். இளம்தவயோகி தவசிநாதன், சுந்தரமகாலிங்கம் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் யாக வேள்விகளை நடத்தினர்.
மலை உச்சியில் மகா தீபங்கள் ஏற்றப்பட்டு 210 சித்தர்கள் வேள்வி நடந்தது. இதனைத்தொடர்ந்து காகன்னை ஈஸ்வரர் கோவிலில் ருத்ரஜெபம், ருத்ரவேள்விகள், பன்னிரு திருமுறைகள், சிவபுராண பாராயணத்துடன் நடந்தது. பூரண கும்பம் வைக்கப்பட்டு கலசவழிபாடும், 108 சங்காபிசேகமும், ஒவ்வொரு கால யாகசாலைபூஜை முடிவடைந்துடன் மூலவருக்கு அபிேஷகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. இதில் திரைப்பட நடிகர் தாமு, சினிமா இயக்குனர் சண்முக பிரியன், சிங்கப்பூர் பூதநாராயண சித்தர், திட்டக்குடி ராஜன், தஞ்சை கோவிந்தராஜ் மற்றும் சிவ தொண்டர்கள், தவயோகிகள் மற்றும் சென்னை, திருவாரூர், திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள், சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சித்தர் மடங்களில்...
மேலும் துறைமங்கலத்தில் உள்ள மீனாட்சி சமேத கைலாசநாதர் கோவிலிலும், வடக்குமாதவி சாலையில் சமத்துவபுரம் அருகே உள்ள மகாலிங்க சித்தர் சுவாமிகள் அதிஷ்டானத்திலும், பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் சுவாமிகளின் மடத்திலும், சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு ருத்ரவேள்விகள், ருத்ர ஜெபவழிபாடு விடியவிடிய நடந்தது.

Next Story