கோவில்களில் பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம்


கோவில்களில் பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம்
x
தினத்தந்தி 2 March 2022 2:13 AM IST (Updated: 2 March 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் கோவிந்தா... கோபாலா.. கோஷங்களுடன் நடந்த சிவாலய ஓட்டம் நேற்று நிறைவடைந்தது. சிவராத்திரியையொட்டி பக்தர்கள் கோவில்களில் விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர்.

நாகர்கோவில்:
குமரியில் கோவிந்தா... கோபாலா.. கோஷங்களுடன் நடந்த சிவாலய ஓட்டம் நேற்று நிறைவடைந்தது. சிவராத்திரியையொட்டி பக்தர்கள் கோவில்களில் விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர்.
சிவாலய ஓட்டம்
சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களுக்கு பக்தர்கள் ஓடியும், நடந்தும் சென்று சாமியை வழிபடுவார்கள். இந்த சிவாலய ஓட்டம் சைவ- வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில பக்தர்கள் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் விரதத்தை தொடங்கினர்.
12 கோவில்கள்
நேற்று முன்தினம் மாலையில் முதல் சிவாலயமான முன்சிறை மகாதேவர் கோவிலில் பக்தர்கள் சாரை, சாரையாக குவிந்தனர். அங்கு புனித நீராடி காவி துண்டுகள் அணிந்து கையில் பனை ஓலை விசிறியுடன் 12 கோவில்களுக்கு சிவாலய ஓட்டத்தை தொடங்கினர். 
அங்கிருந்து ஓட்டமும், நடையுமாக வெட்டுமணி, மார்த்தாண்டம் வழியாக திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்த பின்பு திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில், திருபன்னிபாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு சிவன்கோவில், திருபன்றிகோடு மகாதேவர் கோவில் என ஒவ்வொரு கோவிலாக ஓடி சென்று வழிபட்டனர். 
கோவிந்தா... கோபாலா...
ஒவ்வொரு கோவிலுக்கு செல்லும் போதும் அங்குள்ள நீர் நிலைகளில் புனித நீராடி சாமி கும்பிட்டு பிரசாதம் வாங்கிவிட்டு அடுத்த கோவிலை நோக்கி சென்றனர். இரவு முழுவதும் கோவிந்தா... கோபாலா... என்று சரணம் கோஷம் எழுப்பியபடி 12 சிவாலயங்களுக்கும் ஓட்டமும் நடையுமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் தொடங்கிய சிவாலய ஓட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. நேற்று மாலையில் 12-வது சிவாலயமான நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் ஓட்டத்தை நிறைவு செய்தனர். இதில் பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வந்தனர். சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு வழியெங்கும் மோர், தயிர், கஞ்சி, பழ வகைகள் மற்றும் உணவு வழங்கப்பட்டது.
வாகனங்களில்...
மேலும் பக்தர்கள் நேற்று இருசக்கர வாகனங்கள், வேன், ஆட்டோ, பஸ்களிலும் பயணம் செய்து 12 சிவாலயங்களையும் வழிபட்டு இரவு கண் விழித்து கோவிலில் சாமி கும்பிட்டனர்.
இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிவராத்திரியையொட்டி பக்தர்கள் கோவில்களில் விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story