4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆதனூர் கிராமத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் திருச்சி மாவட்டம் லால்குடி, தெரணிபாளையம், கிழக்கு தெருவைச் சேர்ந்த பழனிசாமி(வயது 27), தர்மராஜ் (25), இவர்களது தந்தை சதாசிவம் (50), மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம், தைலம்மைபுரம் அருகே உள்ள கார்கோவில் கிராமத்தை சேர்ந்த தருண் (21) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 4 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பழனிசாமி உள்பட 4 பேருக்கும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.
இந்த குற்ற வழக்கில் சிறப்பாக பணியாற்றிய பாடாலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் ஏட்டு கோவிந்தசாமி ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி பாராட்டினார்.
Related Tags :
Next Story