979 கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்பு


979 கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்பு
x
தினத்தந்தி 2 March 2022 2:18 AM IST (Updated: 2 March 2022 2:18 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 979 கவுன்சிலர்கள் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார்கள்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 979 கவுன்சிலர்கள் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார்கள். 
979 கவுன்சிலர்கள்
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதி நடந்தது.     இதற்கான முடிவுகள் 22-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா இன்று (புதன்கிழமை) மாநிலம் முழுவதும் அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற இருக்கிறது.
அதேபோல குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு 52 கவுன்சிலர்களும், கொல்லங்கோடு நகராட்சிக்கு 33 கவுன்சிலர்களும், குழித்துறை நகராட்சிக்கு 21 கவுன்சிலர்களும், பத்மநாபபுரம் நகராட்சிக்கு 21 கவுன்சிலர்களும், குளச்சல் நகராட்சிக்கு 24 கவுன்சிலர்களும், 51 பேரூராட்சிகளில் 828 கவுன்சிலர்களும் எனமொத்தம் 979 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பதவி ஏற்பு விழா இன்று நடக்கிறது.
மாநகராட்சி 
நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதற்காக கூட்ட அரங்கு தயார் நிலையில் உள்ளது. இருக்கைகள் சமூக இடைவெளியை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. 
தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 52 கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
4 நகராட்சிகள்- 51 பேரூராட்சிகள்
இதேபோல கொல்லங்கோடு, குழித்துறை, குளச்சல், பத்மநாபபுரம் நகராட்சிகளிலும் கவுன்சிலர்கள் பதவி ஏற்க இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்தந்த நகராட்சி ஆணையர்கள் பதவிப்பிரமாணம் செய்ய இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் செய்யப்பட்டுள்ளது. 
மேலும் 51 பேரூராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கவுன்சிலர்களும் அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் பதவி ஏற்க உள்ளனர். அவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 979 கவுன்சிலர்களும் இன்று பதவி ஏற்றுக் கொள்கிறார்கள்.
மறைமுக தேர்தல்
இதையடுத்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை மாநகராட்சி மேயர், நகராட்சிகளின் தலைவர்கள், பேரூராட்சிகளின் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தலும், பிற்பகலில் மாநகராட்சி துணை மேயர், நகராட்சிகளின் துணைத்தலைவர்கள், பேரூராட்சிகளின் துணைத்தலைவர்கள் ஆகியோருக்கான மறைமுகத் தேர்தலும் நடைபெறுகிறது.
இந்த தேர்தல்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் அதிகாரிகளால் நடத்தப்பட உள்ளது.

Next Story