உக்ரைனில் பலியான கர்நாடக மாணவர் பற்றி உருக்கமான தகவல்


உக்ரைனில் பலியான கர்நாடக மாணவர் பற்றி உருக்கமான தகவல்
x
தினத்தந்தி 2 March 2022 2:41 AM IST (Updated: 2 March 2022 2:41 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் ரஷிய தாக்குதலில் பலியான கா்நாடக மாணவர் பற்றி உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு: உக்ரைனில் ரஷிய தாக்குதலில் பலியான கா்நாடக மாணவர் பற்றி உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.

உணவு, நீர் இல்லை

உக்ரைனில் நடந்த ரஷிய தாக்குதலில் கர்நாடகத்தை சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவன் உயிரிழந்தார். அவருடன் விடுதியில் தங்கி படித்து வந்த ஹாவேரியை சேர்ந்த அமித் என்ற மாணவன் கண்ணீர் மல்க கூறியதாவது:- 

நவீனும் நானும் ஒரே விடுதியில் தங்கி படித்து வந்தோம். நான் 5-ம் ஆண்டும், நவீன் 4-ம் ஆண்டும் படித்து வந்தோம். இருவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நண்பர்களாக பழகி வந்தோம். எங்களுடன் கர்நாடகத்தை சேர்ந்த 25 பேர் உள்ளனர். நாங்கள் பதுங்கு குழியில் இருந்து வந்தோம். முதல் இரண்டு நாட்கள் உணவு, நீர் கிடைத்தது. அதன் பின்னர் கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் இருவரும் தான் வெளியே சென்று உணவு, நீர் வாங்கி வந்தோம். எங்களுடன் இருந்தவா்களுக்கு உக்ரேனிய மொழி தெரியாது. 

குறுக்கு வழியில் 2 முறை சென்றோம்

இதற்கு முன்பு நாங்கள் 2 முறை குறுக்கு வழியில் சென்று உணவு பொருட்கள், ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வந்தோம். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி வரை நாங்கள் தப்பிப்பது பற்றி பேசி கொண்டு இருந்தோம். மேலும் காலையில் பல்பொருள் அங்காடிக்கு சென்று உணவு பொருட்கள் வாங்குவது, ஏ.டி.எம். சென்று பணம் எடுப்பது என்று முடிவு செய்திருந்தோம். அதன்பின்னர் நாங்கள் தூங்கிவிட்டோம். 

ஆனால் காலை 6 மணிக்கு நவீன் மட்டும் எழுந்து தனியாக உணவு பொருட்கள் வாங்கவும், சக மாணவர்களுக்கு பணம் எடுக்கவும் ஏ.டி.எம்.க்கு சென்றார். நாங்கள் எழுந்து பார்த்தபோது, நவீன் கடைக்கு ெசன்றது தெரியவந்தது. பின்னர் அவரது உள்ளூர் செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டு சில உணவு பொருட்களும், ஏ.டி.எம்.மில் பணமும் எடுத்து வர கூறினோம். அவரும் எடுத்து வருவதாக தெரிவித்தார். 

உயிருக்கு உத்தரவாதம் இல்லை

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்ப வரவில்லை. இதனால் அவரது உள்ளூர் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டோம். 

அப்போது எதிர்முனையில் பேசிய ரஷியாவை சேர்ந்தவர், நவீன் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதனை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். வழக்கமாக கடைக்கு நான், நவீன் உள்பட 3 பேர் செல்வோம். ஆனால் நேற்று நவீன் மட்டும் தான் சென்றார். 

நவீன் பலியான குண்டுவீச்சு தாக்குதல் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் தான் நடந்துள்ளது. இதனால் நாங்கள் இருக்கும் பதுங்கு குழி பகுதியில் தான் ரஷியா தாக்குதல் நடத்துகிறது. எங்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இதனால் எங்களை காப்பாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார். 

விரைவாக மீட்க வேண்டும்

நவீனுடன் படித்து வந்த மாணவி ஒருவர் கூறுகையில், நவீன் எங்களுக்கு மிகவும் தைரியமூட்டினார். அவர் தனது உயிரை பொருட்படுத்தாமல் வெளியே சென்று உணவு பொருட்கள், பணம் எடுத்து வந்தார். நாங்கள் இந்தியா திரும்ப போலாந்து செல்ல திட்டமிட்டோம். அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டும் என்று கூறினார். நேற்றும் அவர், பல்பொருள் அங்காடிக்கு சென்று இந்திய பணத்தை டாலராக மாற்றி வருவதாக கூறி சென்றார். 

ஆனால் அவர் ரஷிய தாக்குதலுக்கு உயிரிழந்ததை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளோம். நாங்கள் இருக்கும் இடத்தின் அருகே ரஷிய படை வந்துவிட்டது. எங்களை இந்திய அரசு மீட்க வேண்டும். தயவு செய்து விரைவாக எங்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என்று கூறினார். 

வெளியே வர வேண்டாம்

உக்ரைனில் ரஷியா தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்தது, இந்தியாவில் உள்ள சக மாணவர்களின் பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அவர்கள், மாணவர்கள் பதுங்கு குழியில் இருந்து வெளியே வர வேண்டாம். கல்லூரி நிர்வாகத்திடம் சொல்லி, உணவு, நீருக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story