சேலத்தில் பரபரப்பு: மாஜிஸ்திரேட்டுக்கு கத்திக்குத்து-கோர்ட்டு ஊழியர் கைது


சேலத்தில் பரபரப்பு: மாஜிஸ்திரேட்டுக்கு கத்திக்குத்து-கோர்ட்டு ஊழியர் கைது
x
தினத்தந்தி 2 March 2022 2:54 AM IST (Updated: 2 March 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்திய கோர்ட்டு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:
சேலத்தில் மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்திய கோர்ட்டு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
மாஜிஸ்திரேட்டு
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அஸ்தம்பட்டியில் உள்ளது. இதில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண்-4-ல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருபவர் பொன்பாண்டி (வயது 45). சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (37). ஓமலூர் கோர்ட்டில் அலுவலக உதவியாளராக இருந்த இவர் பணிமாறுதல் ஆகி நேற்று காலை சேலம் கோர்ட்டில் பணிக்கு சேர்ந்தார்.
இந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு பொன்பாண்டி நேற்று காலை கோர்ட்டுக்கு வந்து தனது அறையில் வழக்கு சம்பந்தமான ஆவணங்களை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது பிரகாஷ் மாஜிஸ்திரேட்டு அறைக்கு சென்று, ஓமலூர் கோர்ட்டில் இருந்து பணிமாறுதல் செய்யப்பட்டது தொடர்பாக அவரிடம் கேட்டு உள்ளார். 
கத்திக்குத்து
பின்னர் திடீரென்று பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாஜிஸ்திரேட்டு பொன்பாண்டியை குத்தி உள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள், மாஜிஸ்திரேட்டு பொன்பாண்டியை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 
மேலும் கோர்ட்டு ஊழியர்கள், பிரகாசை பிடித்து அஸ்தம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிபதி ஆறுதல்
இந்த நிலையில் மாவட்ட நீதிபதி குமரகுரு, சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று கோர்ட்டு ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாஜிஸ்திரேட்டு பொன்பாண்டியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 
மேலும் சேலம் கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாஜிஸ்திரேட்டை கோர்ட்டு ஊழியர் கத்தியால் குத்திய சம்பவம் நேற்று கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story