‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 March 2022 2:59 AM IST (Updated: 2 March 2022 2:59 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர்தொட்டி சீரமைக்கப்படுமா? 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் சிட்லகாரம்பட்டி கிராமத்தில் இண்டூர் மெயின்ரோட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன்மூலம் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இங்குள்ள மின்மோட்டார் பழுதடைந்து விட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே பழுதான மின்மோட்டாரை பழுது நீக்கி அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், சிட்லகாரம்பட்டி, தர்மபுரி.
===
தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை 2-வது குறுக்கு தெரு, தேர்பேட்டை சாலை ஆகிய பகுதிகளில் மின்கம்பம் இல்லாததால் தெருவிளக்கு இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே இந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
-மோகன், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.

சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டி 9-வது வார்டு பகுதியில் மின்கம்பத்தில் எதிர்பாராதவிதமாக மின் துண்டிப்பு ஏற்பட்டு ஒரு மாதம் ஆகிறது. கடந்த ஒரு வாரமாக தெரு விளக்குகள் எரியவில்லை. இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். அந்த பகுதியில் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் அந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நவீன், கோனேரிப்பட்டி, சேலம்.
==
பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம்

நாமக்கல்- துறையூர் சாலையில் எருமப்பட்டியில் இருந்து பவித்திரம் செல்லும் பஸ்களில் காலை நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அப்போது பள்ளி மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கிறார்கள். போக்குவரத்து போலீசார் பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும்  இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் இந்த ஆபத்தான பயணத்தை தடுத்திட அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தங்கராஜூ, எருமப்பட்டி, நாமக்கல்.
==
சாக்கடை கால்வாய் அமைப்பார்களா?

சேலம் மாவட்டம் நரசோதிபட்டி 3-வது வார்டு பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் சாக்கடை கால்வாய் இல்லாததால் 3 ஆண்டுகளாக கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு அந்த பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், நரசோதிப்பட்டி, சேலம்.
===
பஸ் நிலையத்தில் இருக்கைகள் சேதம்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் ஓய்வு எடுப்பதற்காக அமைக்கப்பட்ட இருக்கைகள் சேதமடைந்து உள்ளன. பெரும்பாலான இருக்கைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. பயணிகள் அமருவதற்கு போதுமான புதிய இருக்கைகள் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தர கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரன், கிருஷ்ணகிரி.
==
நோய் பரவும் அபாயம்

தர்மபுரி நகராட்சி 18-வது வார்டு அம்பலத்தாடி தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. ஒரு மாதகாலமாக இப்படியே இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே  சாக்கடை கால்வாயில் அடைத்துள்ள குப்பைகளை தூர்வாரி சாக்கடை நீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோகுல், அம்பலத்தாடி, தர்மபுரி.
==
பூங்காவில் பழுதான உடற்பயிற்சி கருவிகள்

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணா சாலையில் உள்ள பூங்காவில் 2  உடற்பயிற்சி கருவிகள் உள்ளன. இந்த கருவிகள் பழுதாகி இருப்பதால் பூங்காவுக்கு வரும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே பழுதான இந்த உடற்பயிற்சி கருவிகளை சரிசெய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், சேலம்.

Next Story