பவானியில் நீண்ட வரிசையில் நின்று விடிய விடிய செல்லியாண்டியம்மனுக்கு புனிதநீர் ஊற்றிய பக்தர்கள்- இன்று சேறுபூசுதல் நிகழ்ச்சி நடக்கிறது
பவானியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விடிய விடிய செல்லியாண்டியம்மனுக்கு புனிதநீர் ஊற்றினார்கள்.
பவானி
பவானியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விடிய விடிய செல்லியாண்டியம்மனுக்கு புனிதநீர் ஊற்றினார்கள்.
மாசித்திருவிழா
பவானியில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதம் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் பக்தர்களே கருவறை சென்று அம்மனுக்கு புனிதநீர் மற்றும் பாலாபிஷேகம் செய்வதும். உடலில் சேறுபூசிக்கொண்டு ஆயிரக்கணக்கானோர் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதும் சிறப்பாகும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் கருவறைக்கே சென்று அம்மனுக்கு புனிதநீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நீண்ட வரிசை
நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ஆண்கள், பெண்கள் என பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கருவறையில் உள்ள செல்லியாண்டி அம்மனுக்கு பால், திருமஞ்சனம் கலந்த புனிதநீர், இளநீர் ஊற்றி அபிஷேகம் செய்தார்கள்.
பவானி மட்டுமின்றி ஈரோடு, சேலம், கோவை, நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களைச்சேர்ந்த பெண்கள் நேற்று மதியம் 12 மணி வரை அம்மனுக்கு அபிஷேகம் செய்தார்கள்.
சேறுபூசுதல்
இன்று (புதன்கிழமை) முக்கிய நிகழ்ச்சியான சேறுபூசுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 10 மணி அளவில் பவானி புதிய பஸ்நிலையம் அருகே உள்ள எல்லை மாரியம்மன் கோவிலில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது அலங்கரிக்கப்பட்ட குதிரை முன்னே செல்ல குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடலில் சேறுபூசிக்கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக வருவார்கள். சாமி வேடம் அணிந்த பக்தர்களும் இதில் கலந்துகொள்வார்கள்.
இதைத்தொடர்ந்து குண்டம் இறங்குதல், பொங்கல் வைத்தல் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) தேரோட்டமும், நாளை மறுநாள் பரிவேட்டையும். 5-ந் தேதி தெப்பத்தேர் இழுத்தலும், 6-ந் தேதி மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துவருகிறது.
Related Tags :
Next Story