‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான கிணறு
பவானி அருகே உள்ள புன்னம் கிராமம் சின்னமேட்டூரில் இருந்து மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் ஒரு பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றுக்கு சுற்றுச்சுவர் இல்லை. அந்த வழியாக தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் சைக்கிளில் சென்று வருகிறார்கள். அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன்பு பாழடைந்த கிணற்றை சுற்றிலும் தடுப்பு சுவர் அமைக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
செந்தில், பவானி.
வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
கோபியில் இருந்து மேட்டுவளவு வழியாக பாரியூர் செல்லும் ரோட்டில் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடம் அருகே ஒரு இடத்தில் தார் பெயர்ந்து கற்கள் தெரிகின்றன. இதனால் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் கற்களில் ஏறி இறங்கி தடுமாறி விழுகிறார்கள். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி கற்கள் தெரியும் அந்த இடத்தில் தார் ஊற்றி சரிசெய்ய வேண்டும்.
நாதன், கோபி.
சாலை சீரமைக்கப்படுமா?
ஈரோடு சூரம்பட்டிவலசில் இருந்து பழையபாளையம் செல்லும் சங்குநகர் சாலையில் பாதாள சாக்கடை அமைத்தல் மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடந்தன. இதனால் சாலையின் குறுக்கே பல்வேறு இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரும் சிரமப்படுகிறார்கள். எனவே சங்குநகர் சாலையில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும்.
ராஜேந்திரன், சங்குநகர்.
குவிந்து கிடக்கும் குப்பை
ஈரோடு முதலிதோட்டம் எம்.ஜி.ஆர்.நகர் செல்லும் சாலை ஓரத்தில் பலர் குப்பைகளை போட்டு சென்று விடுகிறார்கள். இதனால் அந்தப்பகுதியில் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் காற்று அடிக்கும்போது குப்பைகள் பறந்து அந்த வழியாக செல்பவர்கள் மீது படுகிறது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சதீஸ், ஈரோடு.
குண்டும் குழியுமான சாலை
ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகர் செல்லும் சாலை குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மேலும் இந்த ரோட்டில் இரு சக்கர வாகனங்களில் செல்லமுடியவில்லை. பலர் கீேழ விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே குண்டும்-குழியுமான சாலையை சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளங்கோ, ஈரோடு.
வேகத்தடை வேண்டும்
ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் ஊஞ்சலூர் பஸ்நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தில் ரோடு வளைவாக இருப்பதால் எதிரெதிர் திசையில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி ஊஞ்சலூர் பஸ்நிறுத்தத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடை அமைக்க வேண்டும்.
பொதுமக்கள், ஊஞ்சலூர்.
Related Tags :
Next Story