திருவொற்றியூர் தேரடி ‘மெட்ரோ ரெயில் நிலையம் திறப்பு விழா நடத்தும் திட்டம் இல்லை’ - அதிகாரிகள் தகவல்


திருவொற்றியூர் தேரடி ‘மெட்ரோ ரெயில் நிலையம் திறப்பு விழா நடத்தும் திட்டம் இல்லை’ - அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 2 March 2022 2:34 PM IST (Updated: 2 March 2022 2:34 PM IST)
t-max-icont-min-icon

வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் விரிவாக்கப்பாதையில் உள்ள ரெயில் நிலையங்களை பிரதமர் திறந்து வைத்துவிட்டதால் திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையத்திற்கு என்று தனியாக திறப்பு விழா நடத்தும் திட்டம் இல்லை என்று அதிகாரிகள் கூறினார்கள்.

சென்னை,

சென்னை விமானநிலையத்தில் இருந்து அண்ணாசாலை வழியாக வண்ணாரப்பேட்டை வரை நீல வழித்தடம் 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கும், சென்டிரல் மெட்ரோவில் இருந்து பரங்கிமலை வரை பச்சை வழித்தடம் 22 கிலோ மீட்டர் உள்பட 45.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வடிவமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பாதை மற்றும் 34 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு படிப்படியாக ஒவ்வொரு வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து முதல் வழித்தடத்தில் உள்ள வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் விம்கோநகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை இடையே, ரூ.3,770 கோடி செலவில் கடந்த 2016-ம் ஆண்டு விரிவாக்க முடிவு செய்து பணிகள் நடந்து வந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் விரிவாக்கம் செய்யப்பட்ட பாதையையும், ரெயில் நிலையங்களையும் திறந்து வைத்தார்.

ஆனால் இந்த பாதையில் உள்ள முக்கியமான ரெயில் நிலையம் திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையம். இங்கு ஒரு சில பணிகள் நிறைவடையாததால் திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையத்தில் மட்டும் ரெயில்கள் நிற்காமல் பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில், திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையம் எப்போது திறப்பு விழா நடத்தப்படும்? என்று, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

பயணிகள் ரெயிலை இயக்குவதற்கு அனுமதி சான்றிதழ் அளிக்கப்பட்ட உடன் ஓரிரு நாட்களில் ரெயில்கள் திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.ஏற்கனவே இந்த வழித்தடத்தில் உள்ள ரெயில் நிலையங்களை பிரதமர் திறந்து விட்டதால் தற்போது தனியாக திறப்பு விழா நடத்தும் திட்டம் எங்களிடம் இல்லை. இருந்தாலும் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story