இரவு முழுவதும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் மயிலாப்பூரில் சிவராத்திரி விழா கோலாகலம்


இரவு முழுவதும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் மயிலாப்பூரில் சிவராத்திரி விழா கோலாகலம்
x
தினத்தந்தி 2 March 2022 2:53 PM IST (Updated: 2 March 2022 2:53 PM IST)
t-max-icont-min-icon

மயிலாப்பூரில் அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிவராத்திரி விழாவை முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சென்னை மயிலாப்பூர், ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மகா சிவராத்திரி விழா நேற்று மாலை 6 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். 

விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விழாவில் ஜெகத்ரட்சகன் எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., தா.வேலு எம்.எல்.ஏ., அரசு செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், இணை-கமிஷனர்கள் தா.காவேரி, காஞ்சீபுரம் மண்டல இணை கமிஷனர் பெ.ஜெயராமன், உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் தேச மங்கையர்கரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து ஆன்மிக தொடர்பான சொற்பொழிவுகள், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் போன்ற பக்தி சார்ந்த நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் நடந்தது. 3 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு கபாலீசுவரர் கோவில் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட ருத்ராட்சமும், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலிருந்து பஞ்சாமிர்தம், தினைமாவு, மதுரை கள்ளழகர் கோவிலிருந்து நெய்தோசை, அப்பம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிருந்து லட்டு, அப்பம், நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலிருந்து வடைமாலை உள்ளிட்ட பிரசாதங்கள் அரங்குகளில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.

இதுதவிர முக்கிய கோவில்களின் தலபுராணம், தலவரலாறு, கோவில்களின் வழிகாட்டி நூல்கள் விற்பனை செய்யப்பட்டன. கபாலீசுவரர் கோவில் சார்பாகவும், உபயதாரர்கள் சார்பாகவும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகள் அனைத்தும் முக்கிய டிவிக்கள் மற்றும் (http://www.youtube.com/c/MYLAPOREKAPALEESWARAR TEMPLE) உள்ளிட்ட யூ-டியூப் சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டது.
1 More update

Next Story