வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க கள்ளிச்செடிகள்
மசினகுடி சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க கள்ளிச்செடிகள் போடப்பட்டு உள்ளது. இதனால் வனத்துறை அலுவலகத்தை வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டனர்.
கூடலூர்
மசினகுடி சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க கள்ளிச்செடிகள் போடப்பட்டு உள்ளது. இதனால் வனத்துறை அலுவலகத்தை வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டனர்.
சுற்றுலா வாகனங்கள்
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் சென்று திரும்புகிறது. இந்த வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்குவது வழக்கம். இதற்காக மசினகுடி, மாவனல்லா, மாயார், சிறியூர், வாழைத்தோட்டம், சிங்காரா, தொட்டிலிங்க் உள்பட பல்வேறு இடங்களில் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது.
மேலும் அவர்கள் மசினகுடியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையோரம் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி சிறிது நேரம் ஓய்வு எடுத்து செல்கின்றனர். இதனால் அங்கு கடை நடத்தி வரும் வியாபாரிகள் வணிக ரீதியாக பயனடைந்து வருகின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த நிலையில் மசினகுடியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் மாவனல்லா முதல் சிறியூர் பாலம் வரை வாகனங்களை நிறுத்துவதற்கு வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். தொடர்ந்து வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வனப்பகுதியில் வளரும் கள்ளி செடிகளை வெட்டி சாலையோரம் போட்டுள்ளனர்.
இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி மசினகுடி சுற்றுவட்டார பகுதி மக்களும் தங்களுடைய வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிபடும்போது கள்ளி செடிகள் மீது டயர் பட்டு பஞ்சராகி விடுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
முற்றுகை
இதனால் சாலையோரம் வனத்துறையினர் போட்டு வைத்துள்ள கள்ளி செடிகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சிங்காரா வனச்சரக அலுவலகத்தை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக வன ஊழியர்கள் தெரிவித்தனர்.
அதற்கு அவர்கள், உடனடியாக கள்ளி செடிகளை அகற்றவில்லையெனில் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
Related Tags :
Next Story