294 வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
நீலகிரியில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 294 வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர். தலைவர், துணைத்தலைவரை தேர்ந்ெதடுக்க நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) மறைமுக தேர்தல் நடக்கிறது.
ஊட்டி
நீலகிரியில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 294 வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர். தலைவர், துணைத்தலைவரை தேர்ந்ெதடுக்க நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) மறைமுக தேர்தல் நடக்கிறது.
பதவி ஏற்பு
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகளில் 108 வார்டுகள், 11 பேரூராட்சிகளில் 186 வார்டுகள் என மொத்தம் 294 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு கடந்த 19-ந் தேதி தேர்தல் நடந்தது. பின்னர் 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தநிலையில் இன்று ஊட்டி நகராட்சியில் 36 வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா, நகர்மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர்கள் தனித்தனியாக உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்றனர். தொடர்ந்து பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.
25-வது நகரசபை
இதையடுத்து புதிதாக பதவியேற்ற வார்டு கவுன்சிலர்களுக்கு சால்வை, பூங்கொத்து வழங்கி ஆணையாளர் காந்திராஜ் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். விழாவையொட்டி ஊட்டி நகர்மன்ற கூட்டரங்கம் பொலிவுபடுத்தப்பட்டு இருந்தது.
நுழைவுவாயிலில் வாழைகள் கட்டப்பட்டு இருந்தன. நகராட்சி அலுவலகம், நகர்மன்ற கட்டிடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஊட்டியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1866-ம் ஆண்டு முதல் நகரசபை தொடங்கப்பட்டது. பாரம்பரியம் வாய்ந்த நகராட்சி கட்டிடத்தில் தற்போது 25-வது நகரசபை அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
பூ கொடுத்து வரவேற்பு
கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஆணையாளர் ராஜேஷ்வரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சிலர் கட்சி தலைவர்களின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்தனர். முன்னதாக கவுன்சிலர்களை சந்தனம், குங்குமம் வழங்கி பன்னீர் தெளித்து பூ கொடுத்து நகராட்சி அதிகாரிகள் வரவேற்றனர்.
மறைமுக தேர்தல்
இதேபோல் பிற 3 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் அந்தந்த நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் வார்டு கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர். மொத்தம் 294 வார்டு கவுன்சிலர்கள் உறுதிமொழி எடுத்து பதவியேற்று கொண்டனர். பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதால் ஆண்களுக்கு நிகராக பெண் உறுப்பினர்களும் பொறுப்பேற்றதை காண முடிந்தது.
இதையடுத்து நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. நீலகிரியில் 15 உள்ளாட்சி அமைப்புகளில் திமுக பெரும்பான்மையாக உள்ளதால், ஒருமனதாக தலைவர்கள், துணைத்தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 15 உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பதவி 14 இடங்களில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
குன்னூர் நகராட்சியில்
ஆணையாளருக்கு சால்வை அணிவிக்க அ.தி.மு.க.வினர் முயற்சி
எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் வாக்குவாதம்
குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 22 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், காங்கிரஸ் மற்றும் சுயேச்சை தலா 1 வார்டிலும் வெற்றி பெற்றனர். அவர்கள் பதவி ஏற்று கொண்டனர். வழக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஒலிபரப்பப்படுவது வழக்கம். ஆனால் தற்போது ஆணையாளர் உள்பட அனைவரும் எழுந்து நின்று பாடி அசத்தினர்.
இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு, அக்கட்சி நிர்வாகிகள் வாழ்த்து கூறி மாலை அணிவித்தனர்.
மேலும் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்திக்கும் வாழ்த்து கூறி மாலை மற்றும் சால்வை அணிவிக்க முயன்றனர். இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மரபு மீறிய செயல் என்றுக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவர்களை ஆணையாளர் சமானதானப்படுத்தியதோடு தனக்கு மாலை மற்றும் சால்வை அணிவிக்க வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார்.
பதவி ஏற்பு விழாவில்
முன்னாள் கவுன்சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கோத்தகிரி பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 14 வார்டுகளிலும், அ.தி.மு.க. 4 வார்டுகளிலும், சுயேச்சைகள் 2 வார்டுகளிலும், பா.ஜனதா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு செயல் அலுவலர் மணிகண்டன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக சுயேச்சை கவுன்சிலர்கள் லோகநாதன், தாமோதரன் ஆகியோர் தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து கொண்டனர்.
இதனால் கோத்தகிரி பேரூராட்சியில் தி.மு.க. கவுன்சிலர்களின் எண்ணிக்கை 16 ஆனது. பதவி ஏற்பு விழாவின்போது முன்னாள் கவுன்சிலர் தியாகராஜன் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story