ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, 4 நகராட்சி-42 பேரூராட்சிகளில் 790 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு


ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, 4 நகராட்சி-42 பேரூராட்சிகளில் 790 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 2 March 2022 8:05 PM IST (Updated: 2 March 2022 8:05 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, 4 நகராட்சி-42 பேரூராட்சிகளில் 790 கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். தலைவர்கள் பதவிக்கு மறைமுக தேர்தல் நாளை நடக்கிறது

ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, 4 நகராட்சி-42 பேரூராட்சிகளில் 790 கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். தலைவர்கள் பதவிக்கு மறைமுக தேர்தல் நாளை நடக்கிறது
தி.மு.க. கைப்பற்றியது
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. இந்த தேர்தலில் ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் 353 பேர் போட்டியிட்டனர். இதில் 51-வது வார்டு கவுன்சிலர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். ஓட்டுப்பதிவு கடந்த பிப்ரவரி 19-ந் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை 22-ந் தேதி நடந்தது.
இந்த முடிவின் படி தி.மு.க. பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. தி.மு.க. 42 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க.வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே போட்டியின்றி தி.மு.க. வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்று இருந்தார். அதன்படி தி.மு.க. 44 வார்டுகளை கைப்பற்றி தனிப்பெருங்கட்சியாக ஈரோடு மாநகராட்சியை கைப்பற்றியது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 3 வார்டுகளையும், ம.தி.மு.க. ஒரு இடத்தையும் கைப்பற்றின. இதன் மூலம் 60 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 48 இடங்களை கைப்பற்றியது. அ.தி.மு.க. 6 இடங்களிலும், சுயேச்சைகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.
பதவி ஏற்பு விழா
இவ்வாறு 60 வார்டுகளிலும் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது. இதற்காக ஈரோடு மாநகராட்சி அலுவலக மன்ற கூட்ட அரங்கு தயார் செய்யப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் பிரதிநிதிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றதால் மாநகராட்சி வளாகம் விழாக்கோலம் பூண்டு இருந்தது. நேற்று 10 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால், காலை 9 மணிக்கே வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், கட்சியினர், ஆதரவாளர்கள் சூழ மாநகராட்சி அலுவலகத்துக்கு வரத்தொடங்கினார்கள்.
மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கில் தேவையில்லாமல் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கவுன்சிலர் மற்றும் அவருடன் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதற்காக மாநகராட்சி அலுவலக நுழைவுவாயில் முதல் கூட்ட அரங்கு வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தெய்வநாயகி, நிர்மலா, சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் கவுன்சிலர்களின் வெற்றி சான்றிதழ்களை சரிபார்த்து உள்ளே அனுப்பினார்கள். இதுபோல் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள், செய்தியாளர்கள் என அனைவரும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்
காலை 10 மணிக்கு ஆணையாளர் சிவக்குமார் மன்ற கூட்ட அரங்குக்கு வந்தார். முன்னதாக 60 வார்டுகளின் கவுன்சிலர்களும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் உட்கார வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பதவி ஏற்பின்போது வாசிக்க வேண்டிய உறுதிமொழி அச்சடித்து வழங்கப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்தினை பள்ளிக்கூட மாணவிகள் பாட பதவி ஏற்பு விழா தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ஆணையாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஈரோடு கிழக்கு தொகுதி திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அவரது முன்னிலையில் 60 வார்டு கவுன்சிலர்களுக்கும் ஆணையாளர் சிவக்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
1-வது வார்டில் இருந்து 60-வது வார்டு வரை ஒவ்வொரு கவுன்சிலராக அழைக்கப்பட்டு மேடைக்கு வந்து பதவிப்பிரமாண உறுதிமொழியை வாசித்து பதவி ஏற்றனர்.
உறுதிமொழி
கவுன்சிலர்கள் அவரவர் பெயரை கூறி, சட்ட முறைப்படி நிறுவப்பெற்று உள்ள இந்திய அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உறுதி கூறுகிறேன் என்று உறுதி மொழி ஏற்றனர். உறுதிமொழியை உளமாற அல்லது கடவுளறிய என்ற வார்த்தைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி உறுதிமொழி அளிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
சிலர் கடவுளறிய என்றும் பலர் உளமறிய என்றும் உறுதி மொழி ஏற்றனர். தி.மு.க. கட்சியை சேர்ந்த சிலர் கலைஞர் அறிய உளமறிய என்றும், கடவுளறிய, உளமறிய என்றும் கூறி உறுதிமொழி ஏற்றனர். கவுன்சிலர் ஒருவர் விழா மேடையில் இருந்த மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை தொட்டு வணங்கி பின்னர் உறுதிமொழி ஏற்றார். காங்கிரஸ் கட்சி பெண் கவுன்சிலர் ஒருவர், ஆணையாளர் உறுதிமொழி வார்த்தைகளை ஒவ்வொன்றாக கூற அதை திரும்ப கூறி பதவி ஏற்றார்.
தி.மு.க. கட்சியினர் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை வணங்கி பேசுவதாக குறிப்பிட்டனர். சிலர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வையும் குறிப்பிட்டனர். அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு பதவி ஏற்றனர். ஒருவர் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.க்கு நன்றி என்று குறிப்பிட்டார். ஒரு சிலர் ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்தனர். கொ.ம.தே.க. கவுன்சிலர் விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை, வாய்க்கால் வெட்டிய காலிங்கராயனை வணங்குகிறேன் என்று குறிப்பிட்டார்.
அனைவரும் உறுதிமொழி வாசித்து பதவிப்பிரமாணம் செய்ததும் உறுதி மொழியின் கீழ் கையொப்பமிட்டனர். அனைவருக்கும் மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
மறைமுக தேர்தல்
10 மணி முதல் 11.30 மணிவரை பதவி ஏற்பு விழா நடந்தது. இறுதியில் தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.
விழாவில் ஈரோடு மாநகராட்சி பொறியாளர் மதுரம், மாநகர் நல அதிகாரி டாக்டர் பிரகாஷ், செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையாளர்கள் விஜயா, சண்முக வடிவு, பாஸ்கர் உள்பட அனைத்து பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாளை (வெள்ளிக்கிழமை) மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலுக்காக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
நகராட்சி-பேரூராட்சிகள்
ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளிலும் நேற்று கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. கோபியில் 30 கவுன்சிலர்களும், பவானி மற்றும் சத்தியமங்கலம் நகராட்சிகளில் தலா 27 கவுன்சிலர்களும், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் 18 கவுன்சிலர்களும் என 102 கவுன்சிலர்கள் நகராட்சி பதவிகளில் பதவி ஏற்றனர். அந்தந்த நகராட்சி ஆணையாளர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிக்கோவில், பள்ளபாளையம், பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி, அவல்பூந்துறை, மொடக்குறிச்சி, அறச்சலூர், வடுகப்பட்டி, கொடுமுடி, சென்னசமுத்திரம், வெங்கம்பூர், வெள்ளோட்டம்பரப்பு, பாசூர், கிளாம்பாடி, சிவகிரி, கொல்லங்கோவில், சித்தோடு, நசியனூர், பவானிசாகர், அம்மாபேட்டை, ஒலகடம், நெரிஞ்சிப்பேட்டை, நம்பியூர், கூகலூர், காசிபாளையம், எலத்தூர், லக்கம்பட்டி, கொளப்பலூர், கெம்பநாயக்கன்பாளையம், அரியப்பம்பாளையம், வாணிப்புத்தூர், பெரியகொடிவேரி, அந்தியூர், அத்தாணி, பி.மேட்டுப்பாளையம், சலங்கபாளையம், ஆப்பக்கூடல், சென்னிமலை, ஜம்பை, ஊஞ்சலூர் ஆகிய 42 பேரூராட்சிகளில் 2 வார்டுகள் தவிர 628 வார்டு கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றனர். இதில் 20 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பேரூராட்சி செயல் அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். பேரூராட்சி, நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

Next Story